15.08.2012.தனியாக இருப்பதாக உணர்பவர்கள் வெந்நீரில் சூடாக ஒரு குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள் பறந்து போய் விடும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று. தனிமையால் தவித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது இந்த ஆய்வு முடிவு.
தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி. தனிமை என்பது கொடுமையானது. துணையுடன் வசித்தவர்கள் திடீரென யாரும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்படும் போது புழுங்கிப் போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு.புத்துணர்ச்சி ஏற்படும்
இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரை ஆண், பெண்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லை என்றும் மாறாக புத்துணர்ச்சியுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம்.
குளியல் சுக அனுபவம்
சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும். அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகளைப் போக்க இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
இதேபோல் அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித்துள்ளனர்.
நம் பழக்கத்திற்கு நேர் எதிர்
இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் எதிராக உள்ளது. நமது ஊர்களிலெல்லாம் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படும், தனிமையில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணிக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
நம்மூரில் ‘அப்படியாப்பட்ட’ சூழ்நிலையில் இருப்பவர்கள் ‘ஜில்’லென்று குளியல் போடுவார்கள், இவர்கள் சுடுநீரில் குளிக்கச் சொல்கிறார்கள்…அது சரி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஃபீலிங்ஸ்…!