29.09.2012.By.Rajah. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை முல்லைத்தீவு அரச அதிபர் கூறுவது பொய் சூரியபுரம் காட்டில் உள்ள மக்கள் குமுறல்அநாதைகள் போல காட்டுப் பகுதிக்குள் சுடலைக்குள் தள்ளிவிட்டு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அவ்வாறு இருக்கும் போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் கூறியிருப்பது வேதனைக் குரியது. அவர் கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு தமது உளக் குமுறலை வெளியிட்டுள் ளனர் சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்கள். மனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவுக் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சூரியபுரம் காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சூரிய புரம் பகுதியிலுள்ள மக்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர். சூரியபுரத்தில் தங்கியுள்ள குடும்பஸ்தர் ஒருவர் இது குறித்து தெரிவித்ததாவது
முகாமிலிருந்து எங்களை மந்தைகள் போல் ஏற்றிவந்து இந்த காட்டுப் பகுதியில் அநாதரவாக விட்டுள்ளனர். எமக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு தடி தண்டுகளோ ஏனைய வசதிகளோ வழங்கப்படவில்லை.
முகாமில் இருந்து கொண்டு வந்த தடிகளைப் பயன்படுத்தி தறப்பாள்களை கட்டி அதற்குள் பலத்த சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றோம்.
மின்சாரம் இல்லை. அதேவேளை விளக்குகளும் இல்லை. வெறும் மண்ணெண்ணெய் மட்டும் வழங்குகின்றனர். இதனை வைத்து நாம் என்ன செய்வது. குடிதண்ணீர் வசதியில்லை. மலசலகூட வசதி செய்து தரப்படவில்லை. இளம் பெண்கள் ஊட்பட இயற்கைக் கடன்களைக் கழிப்தற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் உடமைகள் நனைந்து விடுகின்றன. நாம் இங்கு கொண்டு வந்துவிடப்பட்டு நான்கு நாள்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு அரச அதிகாரிகளும் எம்மை வந்து பார்க்கவில்லை. இவ்வாறு இருக்கையில் எமக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வேடிக்கையானது என்றனர்.
இது தொடர்பாக அங்குள்ள இளம் குடும்பப் பெண் ஒருவர் தெரிவிக்கையில்
நாம் காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கின்றோம். எனது வீட்டுக்குப் பின்புறம் பெரும் காடு. அப் பகுதியில் இரவு பகல் என்று பாராது இராணுவத்தினர் வந்த வண்ணம் உள்ளனர்.
தனிமையில் இருக்க முடியவில்லை. அடிக்கடி இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எமது வீடுகள் தூரத் தூர இருப்பதால் தனிமையில் இருக்கும் போது எனன் நடைபெறுமோ தெரியாது அச்சமாக உள்ளது. இதேவேளை ஒழுங்கான வீடு இல்லாத காரணத்தால் வீட்டுப் பொருள்களைப் பாதுகாக்க முடியாதுள்ளது. என்றார்
|
சனி, 29 செப்டம்பர், 2012
அநாதைகள் போல விடப்பட்டுள்ளோம்
சனி, செப்டம்பர் 29, 2012
செய்திகள்