சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக 1,300 முறை சின்னச் சின்னதாக அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கே உள்ள சிசுவான் மாகாணம் லுஷான் கவுன்டியில் யான் நகருக்கு அருகே 2 தினங்களுக்கு முன் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 13 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. 20 நொடிகள் வரை கட்டிடங்கள் அதிர்ந்தன.
தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்பட்டதால் பல கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏராளமானோர் வீடுகளை இழந்து சாலையில் தங்கியுள்ளனர். பல இடங்களில் தண்ணீர், மின்சார சேவை முடங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டிவிட்டது.
பலரை காணாததால் அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 11 ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 960 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லுஷான் பகுதியில் இடிபாடுகளில் இருந்து 91 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சின்னச் சின்னதாக ஏற்படும் அதிர்வுகள் 1300 முறை பதிவாகியுள்ளது. இதில் சில அதிர்வுகள் 5.4 ரிக்டர் அளவு வரைகூட பதிவானது. இதனால் நேற்றும் மக்கள் பீதியுடனே காணப்பட்டனர்
0 comments:
கருத்துரையிடுக