அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக் கழகத்தில், அமெரிக்க அரசின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல்களை வெளியிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திங்களன்று, மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் யுடாங் சூ(44), சிங் யாங்(31 ), யீ லீ (31) ஆகிய மூன்று சீன ஆராய்ச்சியாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யுனைடட் இமேஜிங் ஹெல்த்கேர் என்ற சீன ஆராய்ச்சி நிறுவனம் அந்த நாட்டின் நிதி உதவி பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆராய்ச்சி குறிப்புகளை அவர்களுக்கு அளித்ததாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையும், வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.
தீவிர குற்றமான இதனை, அரசு ஒருபோதும் மன்னிக்காது என்று பிரீத் பராரா என்ற அரசாங்க வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
இதில், யுடான் சூ, சிங் யாங் ஆகிய இருவரும், ஞாயிறு அன்று நியுயார்க்கில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் கைது செய்யப்பட்டனர். யீ லீ பிரச்சினைகள் எழும்முன்னரே சீனாவிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் வணிக ரகசியங்களை சீனா மறைமுகமாக அபகரிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது
0 comments:
கருத்துரையிடுக