முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் ஜயலத் ஜயவர்தனவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் போதே அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.கட்சி வட்டாரங்களும் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
ஏற்கனவே அவர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதன் பின்னர் வீடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
1953ம் ஆண்டில் பிறந்த ஜயலத் ஜெயவர்தன 1994ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான அவர், 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றி இருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பதவி வகித்த காலங்களில் டொக்டர் ஜயலத் ஜயவர்தன மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அதிக அளவில் பேசியுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைகளிலும் ஜயலத் ஜயவர்தன பங்கேற்றிருந்தார்.
அத்துடன், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அடிக்கடி சந்தித்து வந்தமையும், அது சார்ந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக