siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 ஜூன், 2013

தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்

 
 
  ரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் வடக்கின் அதிகாரப்பகிர்வினைப் பற்றி மட்டும் பேசுகின்றனரே தவிர, வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி பேசுவதாக இல்லை. வடக்கில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பிரயோகிப்பதா இல்லையா என்பதை விட வடக்கின் தமிழர்களை (பாதுகாக்க அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நேற்று நிப்பொன் ஹோட்டலில் சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று வடக்கு வாழ் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களை கவனத்திற்கொள்ளாது வடக்கில் 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவது தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்வாதார
பிரச்சினைகள் பற்றி கதைக்கவோ, தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கவோ எவரும் இல்லை. அரசாங்கமும் சரி தமிழ் கட்சிகளும் சரி அவரவர் நிலைப்பாடுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.
இன்று வரையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி எவரும் கதைக்கவுமில்லை. இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பில் எந்தத் தீர்வும் எடுக்கப்படவும் இல்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு வருட காலமாகியும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றவில்லை. மீண்டும் இராணுவக் குவிப்பே இடம்பெறுகின்றது.
வடக்கில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாய், தந்தையரை இழந்தும் பிள்ளைகள், கணவனை இழந்தும் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். 50 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் உள்ள மீனவர்கள் தொடர்ந்தும் இதுவரையும் ஒரு தீர்வு காணப்படவில்லை.
மேலும், வடக்கிலுள்ள தமிழர்களுக்கு தமது மொழியிலேயே அவர்களின் கருமங்களை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இன்று வரையிலும் அப்பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அவை தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இன்றும் வட பகுதிகளில் கட்டுப்பாடுகள், பலாத்காரம், ஆட்கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. இவை தொடர்பில் அப் பகுதி கட்சிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறந்த கல்வி முறைமைகள் இல்லாதுள்ளது.
யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு வழங்கப்பட்ட தமிழர்கள் இன்னமும் இராணுவக்கட்டுப்பாடுடனேயே உள்ளனர். இன்னும் பலர் சிறையில் இருக்கின்றனர். யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனவே, இவ்வாறு அப்பதவி மக்களுக்கு பல அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதா? இனியாவது அரசாங்கம் இவை தொடர்பாக பேசுமா?
சிறுபான்மை மக்களுக்கு சேவைகளை வழங்க அவர்களைப் பாதுகாக்க கிடைத்த சந்தர்ப்பத்தினை அரசு தவறவிட்டுவிட்டது. ஆகவே, இனிமேலாவது அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களை மதிக்கும் செயற்பாட்டினை அரசு செய்ய வேண்டும்.
யார் ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பது முக்கியமல்ல. யார் வடக்கு மக்களை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமாகும்.

13ஆவது திருத்தம் நடைமுறையில் இருப்பின் மீண்டும் புலித் தீவிரவாதம் உருவாகுமென அரசாங்கம் நினைக்கின்றது. 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இதில் எவை இருந்தும் பிரயோசனமற்றதே. முதலில் மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான ஓர் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக