siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 2 ஜூன், 2013

சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன்"

 :
 அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்து வருவதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான பணத்தையும் கடனாகப் பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவிடப் பார்க்கின்றது. இந்த அரசாங்கம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மென்மேலும் கடன் பெற வேண்டுமா? என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் காரணிகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அத்தோடு முறையான பொருளாதார மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளை வகுத்துக் கொண்டு நாடும், நாட்டு மக்களும் பாதிக்காத வகையிலான வேலைத்திட்டங்களையே மேற்கொள்ள வேண்டும். மாறாக நாட்டு மக்களை கடனாளிகளாக்கி நாட்டை குட்டிச் சுவராக்கி விடக்கூடாது என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் சீனாவிடமிருந்து பெருந்தொகை கடனைப் பெற்றுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் பிரதான நோக்கம் கடனைப் பெறுவதே அன்றி வேறொன்றும் இல்லை. இவ்வாறு சீனா 2.2 பில்லியன் டொலர்களை கடனாக இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதற்கு முன்னரும்; சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பெருந்தொகையான கடனுதவிகளை இந்த அரசாங்கம் பெற்றுவந்துள்ளது. அவற்றின் மூலம் முறையான, மக்களுக்கு பயன்தரக் கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல, இந்நாட்டு அப்பாவி பொதுக்களே.
இவ்வாறான நிலையில் மேலும் மேலும் கடனுதவிகளைப் பெற்றுக்கொள்வதால் மாத்திரம் நாட்டைப் கட்டியெழுப்ப முடியாது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கேற்ற வேலைத்திட்டங்களை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும். முறையான திட்டமிடல் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இன்று தோல்வியடைந்துள்ளன. அதனையும் நாட்டு மக்களே இன்று சுமந்து வருகின்றனர்.
இன்று நாட்டின ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச நாடுகள் எமது நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் நாம் முதலாவதாக நாட்டின் ஜனநாயகத்தினை சீர்படுத்த வேண்டும். அதன் பின்னரே ஏனைய திட்டங்களுக்கு அடித்தளமிட வேண்டும்.
எமது நாட்டின் ஜனநாயகம் சீராகவும், மனித உரிமைகள் செயற்பாடு எவ்வித பாதிப்புமின்றி காணப்படும் போது பல்வேறு சர்வதேச நாடுகள் தாமாகவே முன்வந்து பல்வேறு உதவிகளை வழங்கும்; எனவே, நாம் அதற்கேற்ற வகையில் முறையான கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.
இந்தியாவிடம் ஒன்றும், சீனாவிடம் இன்னொன்றும், நாட்டு மக்களிடம் வேறொன்றும் கூறி நாட்டு மக்களுக்குள் மேலும் மேலும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. அதனால் எமது நாட்டின் எதிர்காலமே சீரழியும். இதனை இந்த அரசு நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது யுத்தமற்ற சூழல் காணப்படுகிறது. எனவே, அதனை சரியாக பயன்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும். மாறாக திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இனவாத செயற்பாடுகளை தூண்டி விட்டு அதில் ஆதாயம் தேடக் கூடாது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறிவருகின்றன. அதற்கெல்லாம் பின்னணி இருக்கிறது. அதாவது அரசின் கதை வசனத்திலேயே அவர்கள் அப்படி செயற்படுகிறார்கள்.
தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கிலேயே 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்பொழுது அதுதொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்களை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அரசாங்கமோ அது எதுவும் தெரியாததைப் போல இருக்கிறது.
உண்மையில் இவ்வாறான ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்கி அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே நாட்டின் தேசிய இனப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அத்தோடு நாட்டையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
இதேவேளை, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக புதிதாக, 2,2 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்க சீனா முன்வந்துள்ளதுடன், இலங்கை இராணுவத்துக்கு பயிற்சிகளை வழங்கவும், பாதுகாப்புத் தொழில் நுட்பங்களை வழங்கவும் இணங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
இது தொடர்பில் பீஜிங்கில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,
இருதரப்பும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இணங்கியுள்ளன. பாதுகாப்புத் தொழில்நுட்பம், படையினருக்கான பயிற்சி, மற்றும் ஏனைய துறைகளில் தொடர்ந்தும் இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு இடையில் ஒத்துழைப்புகளை பரிமாறிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சீனப் பயணத்தின்போது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதுபற்றி சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பிய போது இலங்கையுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகள் பற்றிய விபரங்களை வெளியிட மறுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments:

கருத்துரையிடுக