அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முந்தைய ஆட்சி காலத்தில் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்த ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியாவார்.
இவர் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அத்துடன் இவர் வெளியுறவு துறை மந்திரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மேலாண்மை தகுதி மற்றும் தலைமை பண்பு தொடர்பான கருத்தரங்குகளில் சிறப்புரை நிகழ்த்தி ஆலோசனை வழங்கி வருகிறார்.
அமெரிக்க அதிபராகும் நோக்கில் தான் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இக் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பில் கிளிண்டனும் சூசகமாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கனடா நாட்டு மாணவர்களுடன் "யூ டியூப்" மூலமாக பேசிய ஹிலாரி கிளிண்டன்:-
"எனது வாழ்நாளுக்குள் அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண்மணி பொறுப்பேற்பதை காண ஆசைப்படுகிறேன். அடுத்த முறையோ அல்லது, அதற்கு அடுத்த முறையோ சிரமமான அந்த பதவியில் ஒரு பெண் அமர்ந்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்ற செய்தியை ஆண் சமுதாயத்துக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராகும் ஆசை ஹிலாரிக்கு இல்லை என ஒரு தரப்பினர் கூறிவந்த போதிலும் தனது மனதுக்குள்ளும் அமெரிக்க அதிபராகும் ஆசை சிறகடித்துக் கொண்டிருப்பதை ஹிலாரி கிளிண்டன் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக