siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 23 மே, 2014

ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்

தாய்லாந்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடியில் முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி சுமார் ஒன்பது மாதங்களாக எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த போராட்டத்தினால் அந்நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வந்த நிலையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் யிங்லக் ஷினவத்ராவை பதவியிலிருந்து நீக்கியது.
அதனையடுத்து நிவட்டும்ராங் பூன்சாங்பைசன் என்பவர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டும், அது முழுமையாக செயல்பட முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அங்கு ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றாது என அப்போது தெரிவிக்கப்பட்டது.
எனினும், தாய்லாந்து ராணுவ தலைமை தளபதி பிரயுத் சான்-ஓ-சா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “”நாட்டில் சகஜநிலையை விரைவாகக் கொண்டு வருவதற்காக, ராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறை அடங்கிய தேசிய அமைதி காக்கும் குழு, வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் அனைவரும் அமைதி காக்குமாறும், அரசு ஊழியர்கள் தங்கள் வழக்கம்போல் தங்கள் அலுவல்களில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.
ஊரடங்கு: இதனிடையே, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தேசிய அமைதி காக்கும் குழுவின் அறிவிப்புகளும், நாட்டுப்பற்று இசையும் மட்டுமே ஒலிபரப்பப்படுகின்றன.
மக்களிடம் துல்லியமாக செய்திகள் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என ராணுவம் அதற்கு விளக்கமளித்துள்ளது.
எதிரெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சியினர் தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அவர்களை ஆர்ப்பாட்டப் பகுதிகளிலிருந்து வெளியேற்ற சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்த 1932-ஆம் ஆண்டு முதல், அந்நாட்டு ராணுவம் இதுவரை 18 முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு, அதில் 11 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக