siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனம்!– மாவை சேனாதிராசா

08.08.2012.
அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று முன்நாள் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
பௌத்த ஒற்றையாட்சி நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அரசு சதி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஆரம்பமாகவே தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்காகக் கொண்டு அரசு நயவஞ்சக செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இத்தகைய அரசின் சதி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பேரினவாத, மதவாத அடாவடித்தனங்களை சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள அரசாங்கம் அதற்கான தூண்டுதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போதும் அரசின் இலக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மீது ஒரே வகையாகவே உள்ளது.
இந்து ஆலயங்கள் மீது பௌத்த பேரினவாதம் முன்னெடுத்து வரும் அடாவடித்தனங்கள் இன்று முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பௌத்த பிக்குகள் முன்னின்று நடத்தும் இவ் அடாவடித்தனங்களுக்கு அரசின் ஆசீர்வாதமும் மறைமுகமாக கிடைத்து வருகின்றது.
இத் தொடரின் அடிப்படையிலேயே பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பாணமை பிள்ளையார் ஆலய விக்கிரகமும் உடைத்தெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக இடம்பெற்று வரும் பேரினவாத, மதவாத அடாவடித்தனங்கள் போன்று உலகில் வேறு எங்கும் இடம்பெறுவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் அடையாளமுள்ள சமூகங்கள் இல்லையென காட்ட முனையும் அரசின் நடவடிக்கை உச்சநிலைக்குச் சென்றுள்ளது.
ஆதிக்க வெறியாட்டம் மூலம் நாட்டை பௌத்த சிங்கள ஒற்றையாட்சி நாடாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒற்றையாட்சி ஆதிக்கம், பௌத்த இனவாதம் மூலம் இலங்கை முழுவதும் சர்வாதிகார முடிசூடா மன்னன் ஆட்சி முறைமைக்கு இட்டுச் செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே சிறுபான்மையின மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.
வட, கிழக்கில் தங்களை தாங்களே ஆளும் உரிமை பெற்று வாழ வேண்டுமென்ற இலட்சியம் கொண்ட தமிழ் மக்கள் அரசுக்கெதிராக வாக்களித்து தமது அரசியல் உரிமையை வென்றெடுக்க முன்வர வேண்டும். ஆகவே சிறுபான்மையினரான நாம் அனைவரும் இன, மத வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு அரசின் சதி நடவடிக்கைகளை முறியடிக்க போராட வேண்டும்.
முஸ்லிம்கள் தமிழர்களுக்கெதிரானவர்கள் எனக் காட்ட முனையக் கூடாது. தமிழர்களுக்கெதிராகவும் அவர்களின் அபிலாஷைகளுக்கு எதிராகவும் முஸ்லிம் காங்கிரஸ் செயற்படக்கூடாது எனவும் குரல் கொடுத்தனர்.
உணர்வு பூர்வமாக முஸ்லிம்களிடையே எழுந்த அப் பூகம்பத்தின் விளைவாகவே கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட நேரிட்டது. முஸ்லிம் மக்களின் இத்தகைய உணர்ச்சி பூர்வமான எழுச்சியை தமிழர் தரப்பும் பின்பற்ற வேண்டும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்பும் தமிழ், முஸ்லிம் மக்கள் அதே உணர்வோடு ஒன்றிணைய வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும் போது இனப்பிரச்சினை தீர்விலும் சுமுகமான தீர்வினை எங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். நம் தாயகத்தில் நமது உரிமையை நிலை நாட்டுவதற்கான சந்தர்ப்பமாக கிழக்குத் தேர்தலை பயன்படுத்துவோம்.
இத்தேர்தலில் அரசாங்கம் தனது முழுப் பலத்தையும் படை பலத்தையும் தன் கூலிப்படைகளையும் பயன்படுத்தி வெற்றியடைய முயற்சிக்கும். அதேவேளை இறுதி நேரத்தில் வாக்களிக்கச் செல்லாமல் தடுக்கும் உபாயங்களையும் கையாளும்.
கிறீஸ் பூதம், கழிவு எண்ணெய் கலாசாரம் போன்ற சேஷ்டைகள் வரலாம். இது விடயத்தில் நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இதேவேளை, வாக்களிப்பு வீதத்தையும் நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இவ்விடயம் தொடர்பாக வாக்காளர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்.
எமது நில ஆக்கிரமிப்புக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் சாத்வீகப் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம்.
இதற்கிடையில் தேர்தல் குறுக்கே வந்து விட்டது. இந்நாட்டில் ஒரே தேர்தல் மயம் தான் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபா செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் மக்களின் பணமாகும். மக்களின் பணத்தை அரசு செலவிடுகிறது.
இவற்றுக்கெல்லாம் ஆப்புவைக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். கிழக்குத் தேர்தல் மூலம் எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தன்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செல்லையா இராசையா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

0 comments:

கருத்துரையிடுக