siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

எமது இலட்சியத்தை அடைய அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,
இன்றைய நிலையில் எமது இலட்சியம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த, எங்களை நாங்களே ஆளக்கூடிய, காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சியே ஆகும். அந்தச் சுயாட்சியை நாம் அடைய வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என த. தே. கூட்டமைப்பு வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டூர், 14ஆம் கொலணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது இன விடுதலைப் போராட்டம் இன்று எம்மால் மட்டுமல்ல புலம் பெயர் தமிழர்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா போன்ற வல்லரசுகளினால், ஐரோப்பிய நாடுகளினால், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களினால் பிரயோகிக்கப்படும் அழுத்தத்தின் மத்தியில் கிழக்கு மாகாணசபை காலம் கனியுமுன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவசர அவசரமாக கலைக்கப்பட்டுள்ளது.
உலக போராட்ட வரலாறுகளையும் அதற்கான தீர்வுகளையும் தெரிந்தும் புரிந்தும் வைத்திருந்தால் மகிந்த இப்படி செயற்படமாட்டார். ஐரிஸ் போராட்டம் சிம்பெயினுடனான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டது.
கிழக்குத் தீமோர், ஹாச்சே போன்ற விடுதலைப் போராட்டங்கள் சர்வதேச மத்தியஸ்தத்தினுடன் இரு தரப்பும் பேசித் தீர்க்ப்பட்டது. எமது ஆயுதப்போராட்டம் நிறைவடைந்த பின்பு பிரச்சினைக்குரிய தமிழ்த் தரப்பு, தீர்வு தரவேண்டிய அரச தரப்பு ஆகிய இருதரப்புகளும் பேசி தீர்வு காணாமல் எமக்கு எதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு?
வாய் திறந்தாலே துவேஷம் கக்கும் பேரினவாத அமைச்சர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எமது பிரச்சனைக்கு, எமது உரிமைப் போராட்டத்திற்கு ஜனாதிபதி மகிந்த ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பாரென்றால் அது நாங்கள் காணும் பகல் கனவாகத்தான் அமையும்.
எமது உடன் பிறப்புக்களாக இருந்து இன்று செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக சேராத இடம் சேர்ந்த தமிழ்ச் சகோதரர்களைப் பற்றி இம்மேடையில் பேசி எம்மைச் சிறுமைப்படுத்த விரும்பவில்லை.
இன்றைய நிலையில் எமது இலட்சியம் வடக்கு கிழக்கு இணைந்த, எங்களை நாங்களே ஆளக்கூடிய, காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சியே ஆகும்.
அந்தச் சுயாட்சியை நாம் அடைய வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு கூட்டமைப்பிற்கு வாக்களித்து சர்வதேசம் தற்போது இலங்கை அரசு மீது பிரயோகித்துக் கொண்டிருக்கும் அழுத்தத்தை மேலும் பலப்படுத்த வேண்டும்.
எமது மக்கள் இவ்வளவு காலமும் இழந்த சொத்துகளுக்கும் உயிர்களுக்கும் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழத் தேசியத்திற்கே வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.