siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 16 நவம்பர், 2012

நாவின் சிறப்புப் பிரதிநிதி சிறிலங்காவுக்கு கடும் கண்டனம் !

.          
 
16.11.2012.By.Rajah.சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நாவின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் தனித்துவத்துக்கான சிறப்புப் பிரதிநிதி கப்ரியேலா க்னவுல் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவின் அரசியலமைப்பின் 107 வது பிரிவின் மூலம் சிறிலங்கா நாடாளுமன்றம், நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

இது சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்ற தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்பாடுகளுக்கு எதிராகவும் இது உள்ளது.

சிறிலங்காவில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் கவலையளிக்கின்றன.

சிறிலங்கா நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பதில் நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளின் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைவதாக கொள்ள வேண்டி வரும்.

சிறிலங்கா நீதித்துறை அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களோ மறைமுக அழுத்தங்களோ இல்லாமல் அவர்கள் தங்களின் தொழில் ரீதியிலான பணிகளை எந்தவித அச்சமும், முறையற்ற தலையீடும், வெளி அழுத்தங்களும் இல்லாமலும், அனைத்துலக கடப்பாடுகளுக்கு அமைவாகவும் மேற்கொள்ளக் கூடிய சூழலை சிறிலங்கா அரசு உருவாக்க வேண்டும்.

சிறிலங்காவின் நீதித்துறை மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் தொடர்பாக சிறிலங்கா அரசு உண்மையான விசாரணைகளை நடத்துவதில்லை.

அதை செய்தவர்கள் அதற்குப் பொறுப்புக்கூற வைக்கப்படுவதில்லை என்று சுதந்திரமான மனிதஉரிமை நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

சிறிலங்கா நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யமுடியாத தன்மையானது அந்த நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை தாங்கும் முக்கிய தூணாக உள்ளது.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த கொள்கையில் தலையீடுகள் இருக்க வேண்டும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் சங்கடங்களை ஏற்படுத்துகின்றன.

மிகமோசமான நடத்தைகள் அல்லது திறமையற்றதன்மை காரணமாக மட்டுமே நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

அதுவும்கூட முறையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலான நியாயமான வழக்கு விசாரணைகள் நடந்த பின்னரே அவ்வாறு செய்யவேண்டும்.

இந்த வழக்கு நடைமுறைகளின் முடிவுகள் கூட சுயாதீனமான மீளாய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

சுயாதீனமான நீதிபதிகளை பழிவாங்குவதற்கான ஒரு வழிமுறையாக ஒழுங்காற்று நடவடிக்கைகள் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது” என்றும் கப்ரியேலா க்னவுல் கண்டித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக