பிரான்சில் ஆண்களும் பெண்களும் தமக்குள் ஒரு பால் மண உறவு கொள்வதை சட்டம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், லாரோஸ்(Larousse) அகராதி ஒருபால் உறவையும் திருமணம் என்று பொருள் தந்துள்ளது.
இந்த அகராதியானது எதிர்வரும் 2014ம் ஆண்டில் வெளிவரும் இதில் திருமணம் என்ற சொல்லுக்குப் புதிய பொருள் தரப்பட்டுள்ளது.
அதாவது ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரோ வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்தவரோ இணைந்து வாழ தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் தந்துள்ளது.
முந்தைய அகராதிகளில் திருமணம் என்ற சொல்லுக்கு, ஆணும் பெண்ணும் இணைந்து வாழ நாட்டின் சட்டப்படி நடைபெறும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் காணப்பட்டது. புதிய அகராதி தேசியச் சட்டப்படி என்பதை நீக்கிவிட்டது. ஆணும் பெண்ணும் என்பதையும் மாற்றிவிட்டது.
வருகின்ற வாரங்களில் பிரெஞ்சு மேலவையில் ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா இயற்றப்படும். இந்த சூழ்நிலையில் இந்த அகராதியைச் சிலர் பாராட்டுகின்றனர். ஆனால் UMP கட்சியைச் சேர்ந்த ஹெர்வி மேரிட்டோன் என்பவர் ஒரு பால் உறவை கடுமையாக எதிர்த்தைப் போல இந்த அகராதியையும் எதிர்த்துள்ளார்.
மேலும் அகராதியில் இவ்வாறு பொருள் கூறி இருப்பது நாட்டின் ஜனநாயகப் பண்புக்கு எதிரானது என்றும் இப்போக்கை கடுமையாகக் கண்டித்து ஒடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இக்கட்சியின் துணைத்தலைவரான லாரண்ட் வக்கீசும் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதற்கிடையே இந்த அகராதியின் வெளியீட்டாளர்கள் விடுத்த ஓர் அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் திருமணம் என்பதற்கான பொருள் மாறி வருவதையே நாங்கள் அகராதியில் தெரிவித்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக