நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிக்குள் புகுந்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் இன் போராளிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பல மாணவர்கள் உட்பட 42 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொட்டிஸ்கும் பொது வைத்தியசாலையில் இருந்து அதிகாரிகள் AFP செய்திச் சேவைக்குத் தகவல் அளிக்கையில், மமுடோ இடைநிலைப் பள்ளியில் இருந்து துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப் பட்ட 42 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சடலங்கள் அங்கு வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நைஜீரியாவின் முக்கிய வர்த்தக நகரான பொட்டிஸ்கும் இல் இருந்து மமுடோ 5 Km தொலைவிலேயே அமைந்துள்ளது. இங்கு சமீப காலமாக போக்கோ ஹராம் ஆயுதக் குழுவின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் தப்பித்த ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தகவல் தருகையில், கொல்லப் பட்டவர்கள் அனைவரையும் முதலில் பிணைக் கைதிகளாக ஹாஸ்டலில் பிடித்து வைத்ததாகவும் பின்னர் அவர்கள் மீது சிறிய வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் பாடசாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக ஒளிந்து சென்றவர்களையும் காயங்களுடன் ஓடிச் சென்றவர்களையும் தேடினர். இதன் போது காயங்களுடன் 6 மாணவர்கள் கண்டுபிடிக்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதேவேளை வியாழக்கிழமை டோகொன் குக்கா எனும் நகரில் நைஜீரிய இராணுவம் புகுந்து நிகழ்த்திய தாக்குதலில் 22 போராளிகள் கொல்லப் பட்டதற்குப் பதிற் தாக்குதலாகவே போக்கோ ஹராம் இன் இன்றைய தாக்குதல் நிகழ்த்தப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. இந்நிலையில் நைஜீரிய அரசு மேலதிக வன்முறைகளக் கட்டுப் படுத்தும் பொருட்டு அடமாவா,போர்னோ, மற்றும் யோபே எனும் மூன்று மாநிலங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை போக்கோ ஹராம் உடன் சம்பந்தப் பட்ட வன்முறைகளில் 3600 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
''மேற்குலகக் கல்வி தீங்கானது!' எனப் பொருள் படும் போக்கோ ஹராம் குழுவைச் சேர்ந்த போராளிகளால் கடந்த சில மாதங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கொல்லப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக