கல்விச் சபை உறுப்பினர் செல்வி வனிதா நாதன் மூத்த லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்களுக்கு ஆதரவு!
மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறித்த முடிவை அவர் மீளப் பெற்றுள்ளார்.
மார்க்கம் நகரின் நலனில் தொடர்ந்தும் அக்கறை காட்டுவதோடு அதன் வளர்ச்சிக்காய் ஒரு கல்விச் சபை உறுப்பினராக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன் எனச் செல்வி வனிதா நாதன் தெரிவித்தார். எனது குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவு என்னை நெகிழச் செய்கிறது. எதிர்காலத்தில் உங்கள் அனைவரது ஆதரவுடனும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நான் போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்களுக்கு தனது முழு ஆதரவைச் செல்வி வனிதா நாதன் வழங்குவார். மார்கம்-தோண்கில் என்கிற இப் புதிய தேர்தற் தொகுதியானது அவரது பழைய தொகுதியின் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரு யசுடின் ரூடோ அவர்களின் தலைமையில் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியும் இளையோரின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டும் வயோதிபர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கியும் ஒரு வலுவான கனடாவை உருவாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காய் நாம் இணைந்து செயற்பட வேண்டிய காலம் இது என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் செல்வி வனிதா நாதன் அவர்கள் மிகவும் திறமைமிக்க ஒரு இளம் பெண்ணும் கீழ்தட்டு மக்களோடு அர்ப்பணிப்போடும் அதிக அக்கறையுடனும் பணியாற்றுவதை முதன்மையாகக் கொண்டவர் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தின் ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் வனிதா நாதன் தனக்கும் லிபரல் கட்சிக்கும் வழங்கும் ஆதரவு சிறப்பானது எனவும் குறிப்பிட்டார்.
0 comments:
கருத்துரையிடுக