22.08.2012.லண்டனில் உள்ள ஒரு பெயர்போன கோவிலில், சாப்பாடு கேட்டுச் சென்ற தமிழன் ஒருவனைத் தாக்கி வெளியே கொண்டு வந்துபோட்டுள்ளனர் நிர்வாகத்தில் இருக்கும் சிலர். இதற்கு அக்கோயிலில் உள்ள குருக்களும் துணைபோன சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்றுள்ளது. அட பேர்போன கோயில் என்று ஏன் எழுதவேனும் ? அது ஈலிங் அம்மன் கோவில் தான் ! அடிவாங்கிய இளைஞன் கோமா நிலையில் உள்ளார், கோவில் சீல் வைக்கப்பட்டது ! சுமார் 11 பேர்கைதாகி பின்னர் விடுதலையானார்கள் ! அப்ப என்ன தான் அங்கே நடந்தது ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !
லண்டனில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு, பேர்போன பழைய கோவில்களில் ஒன்று ஈலிங் அம்மன் கோவில் ஆகும். இக்கோயில் நிர்வாகிகள், ஊரில் உள்ள தமிழ் மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளனர். பல ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பு, விதவைகள் மறுவாழ்வு என்று பல நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் இவ்வளவு ஆண்டுகளாக இவர்கள் செய்து வந்த நற்பணிகள் எல்லாம் ஒரே நிமிடத்தில் கலைந்துபோய்விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் ஈலிங் அம்மன் கோவிலுக்குச் சென்று, உணவு உள்ளதா என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த இளைஞர் வல்வெட்டித்துறைச் சேர்ந்தவர் என்றும், அவர் வீடற்ற நிலையில் ஒரு அகதியாக, வாழ்ந்து வருகிறார் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது.குறிப்பிட்ட இளைஞர் விரக்தியில், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், சம்பவ தினத்தன்று அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உணவு கேட்ட இளைஞருக்கு, கோவில் நிர்வாகிகள் கூறிய பதில் ஆத்திரமூட்டியுள்ளது. ஒரு கொஞ்ச சாப்பாடு கூட இல்லையா என்று அவர் கேட்டுள்ளார். ஆனால் உணவு முடிந்துவிட்டதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனை அடுத்து ஏற்பட்ட வாய் தர்கத்தில், கோயிலுக்கு உள்ளேயே வைத்து அவ்விளைஞர் பலமாகாத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை அப்படியே தூக்கிவந்து வெளியே போட்டுள்ளனர் சிலர். இவர்கள் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள் பொலிசார். இதனிடையே பொலிசாருக்கு அடித்துச் சொல்லிவிடலாம் என, ஒருவர் தனது மோபைல்போனைத் தூக்க, அங்கே நின்றிருந்த ஐயர் ஒருவர் பொலிசுக்கு போன் பண்ணவேண்டாம் ! இது பொலிஸ் கேஸ் ஆகிவிடும் என்று பகிரங்கமாக உரக்க கூறியுள்ளார் என்றால் பாருங்களேன் ! குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துவிட்டதாக பொலிசார் நினைக்கட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.
பசி என்று வந்தால், எதிரி என்றாலும் உணவுகொடுக்கும் மரபில் வந்தவர்கள் தமிழர்கள். அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! கோயில்….. ஒரு திருப்பணி புரியும் புனிதஸ்தலம் ! தெய்வாதீனம் மிக்க இடம் …. அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! ஒரு ஈழத் தமிழன் அதுவும் வீடு இல்லாதான ஒரு எதிலி ! அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! சரி அடிக்காமல் அவரை அப்படியே பிடித்து வெளியே கொண்டுபோய் விட்டிருக்கலாம் அல்லவா ? படு மோசமாக அடித்து கோமா நிலைக்கு அவரைத் தள்ளி, பின்னர் பொலிசையும் அழைக்காமல் விடுவது எந்தவகையில் ஞாயம் ? இதனைப் பார்த்த வேற்றினப் பெண்(ஆங்கிலப் பெண்மணி) ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்தபொலிசார், குறிப்பிட்ட 30 வயது இளைஞன் பிழைக்கமாட்டார் எனக் கருதி ஏல்-அம்பூலன்சை(உலங்கு வானூர்தி மருத்துவப் பிரிவை) வரவழைத்துள்ளனர். கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பாட்ட இளைஞனுக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள் என்று கோயில் நிர்வாகத்திடம் அதிர்வு இணையம் கேட்டது, இது நீதிமன்றில் உள்ள வளக்கு இதுகுறித்து எதுவித கருத்தையும் நான் கூறமுடியாது என்கிறார்கள். கேள்விக்கு கோயில் நிர்வாகம் எந்தப் பதிலையும் கூறவில்லை. நடந்த இச் சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் வெளியே கொண்டுவரக்கூடாது என்பதில் மட்டும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர் விடையங்களில் அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை ! இதுவே ஒரு தமிழ் இளைஞன் லண்டனில் உள்ள புத்த விகாரை ஒன்றுக்குச் சென்று உணவுகேட்டபோது, அவர் தாக்கப்பட்டிருந்தால், தமிழர்கள் அந்த புத்தவிகாரை நிர்வாகிகளை சும்மா விட்டிருப்பார்களா ? இல்லையேல் கிறீஸ்த்தவ மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் வழிபாட்டுஸ்தலங்களில் இவ்வாறு சம்பவங்கள் ஏதாவது நடந்துதான் உள்ளதா ? கோவிலில் என்ன நடந்தாலும் குற்றமில்லையா ? இதனை தமிழர்கள் தட்டிக்கேட்க்கமாட்டார்களா ?
ஈழத்தில் தமிழர்களை யாராவது அடித்தால் மட்டும் தானா நாம் குரல்கொடுப்போம் ? வேறு இடங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நாம் தட்டிக்கேட்க்க மாட்டோமா?
வல்லிபுரத்தான்