siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஏன் இந்த ஏற்றத் தாழ்வு?

23.09.2012.By.Rajah.இலங்கையின் மாகாண மட்டத்திலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளைத் தணிக்க, அதிகளவில் மத்திய மயப்பட்டிருக்கும் அரச வரி அறவீட்டு நடைமுறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்! என அபிவிருத்திப் பொருளியலாளரான கலாநிதி. முத்துக்கிருஷ்னன் சர்வானந்தா யாழ்.பொருளாதார இணையத்திற்கு இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் சரி சமமற்ற நிலையில் வளர்ந்து வரும் மாகாண மட்டத்திலான பொருளாதார வளர்ச்சி தொடர்பாக நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் அரைப் பங்கினை எடுத்துக்கொள்கின்றது (2011 இல் 44.4%). இதனால் அதிக செல்வம் சேரும் மாகாணமாக மேல் மாகாணம் திகழும் அதேவேளை, ஏனைய மாகாணங்களுடனான வருமான ஏற்றத் தாழ்வு இடை வெளியும் தொடர்ந்து விரிவடைகின்றது. பொருளியல் விஞ்ஞானத்தின் படி, ஒரு நாட்டின் வருமான ஏற்றத் தாழ்வுகளைத் தணிக்க அதன் அரச வரி வருமான மூலங்களை செயல் திறனோடு கையாள வேண்டும். எனினும், இலங்கையின் அனுபவத்தில் இது தவறாகவே பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. உலகலாவிய ரீதியில் வரி வருமானது நுகர்வு மீதான (நேரில் வரி) வரியிடலிலேயே அதிம் சார்ந்துள்ளதுடன், இது அந்த அந்தப் பிரதேசங்களில் வாழும் செல்வச் சீமான்கள் மற்றும் நிறுவனங்களின் கைகளையே எதிர் பார்த்துள்ளது. 1977ம் ஆண்டின் பின்னர், இலங்கையின் வரி வருமானத்தில் நுகர்வு மீதான வரி வருமானங்களின் பங்களிப்பு அதிகரித்துச் சென்ற அதேவேளை, வருவாய் ஈட்டுதல் மீதான வரி (நேர் வரி) வருமானத்தின் பங்களிப்பு குறைவடைந்து செல்வதைக் காணலாம். இதுவே பிற்காலத்தில் மாகாணங்களிற்கு இடையில் செல்வச் சம நிலை இன்மைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக மாறியதுடன், நேரில் வரி வருமானங்கள் மற்றும் மக்களின் சேமிப்பானது மேல் மாகாணம் நோக்கி பாயவும் காலானது. எனவே, நேரில் வரி வருமானங்கள் மற்றும் மக்களின் சேமிப்பினை உரிய மாகாணமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாண சபைகளிற்கு அரச வரி முகாமைச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். மாகாண சபைகள் தற்போது அரச ஊழியர்களிற்கான சம்பளங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் இதர சில நடைமுறைச் செலவீனங்களை மேற் கொள்வதற்கான சுதந்திரத்தினைப் பெற்றுள்ளன. எனினும், இது போதுமானது அல்ல. குறிப்பாக, ஒவ்வொரு மாகாணங்களும் தமது பண அடித்தளத்திற்கு ஏற்ப வருமானம் ஈட்டவும், செலவுகள் மேற்கொள்ளவதனையும் ஊக்குவிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என முத்துக்கிருஷ்னன் சர்வானந்தா யாழ்.பொருளாதார இணையத்திற்குத் தெரிவித்தார்