வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தானில் தலிபான்
தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய 14 வயது சிறுமியை சுட்டது யார் என்று தெரிவித்தால்,
அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு
பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய்(வயது 14), பயங்கரவாதத்துக்கு
எதிராகப் பேசி வந்தார். இவருக்கு அமைதிக்கான தேசிய விருதை வழங்கி அந்த நாட்டு அரசு
கௌரவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவி மலாலாவை, தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் சிறுமியின் தலையில் ஒரு குண்டும், முதுகெலும்பு அருகிலும் ஒரு குண்டும் பாய்ந்தது. படுகாயமடைந்த அவர், பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு லேடி ரீடிங் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைமை மருத்துவர் மம்தாஷ் கான் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதுபற்றி கான் கூறுகையில், மலாலா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புவதாகத் தெரிவித்தார். அவரது தலையில் வீக்கத்தை குறைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார். மலாலாவின் மாமா அகமது ஷா கூறுகையில், மலாலாவின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் அவளை வெளிநாடுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதற்கு அவளது உடல்நிலை ஒத்துழைப்பது சிரமம் என்றும், இன்னும் 10 நாள்களுக்கு அவரது நிலைமை குறித்து எதுவும் கூறமுடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். முன்னதாக தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல்லா இக்ஸன் கூறுகையில், மாணவி மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான். தலிபான்களுக்கு எதிராக மலாலா தொடர்ந்து பேசி வந்தார். அதனால்தான் தாக்குதல் நடத்தினோம். அவர் உயிர் பிழைத்தாலும் மீண்டும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக மலாலாவை எந்நேரமும் துபாய்க்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் விமான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |