07.10.2012.By.Rajah.படுகாயமுற்ற 9 பேர் வைத்தியசாலையில்இருபாலை, கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் பருத்தித்துறை வீதியில் நேற்று நண்பகல் நடைபெற்ற கோர விபத்தில் மினி பஸ் சாரதி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். 9 பேர் காய மடைந்தனர்.
உயிரிழந்தவர்களும் காயமடைந்த வர்களும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த மூவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிகளை ஏற்றிக் கொண்டுவந்த மினிபஸ்ஸும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தென்னிலங்கை பஸ் ஒன்றும் நேருக்கு நேர்வேகமாக மோதிக் கொண்டதில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.
நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மினிபஸ் சாரதியும் அதிலிருந்த பயணி ஒருவரும் உயிரிழந்தனர். தென்னிலங்கை தனியார் பஸ்ஸின் சாரதி, மற்றும் நடத்துநர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருபாலை, கற்பகப்பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் பருத்தித்துறை வீதியில் அகலிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீதியில் ஒரு பக்கத்துக்கு மட்டும் காப்பெற் இடப்பட்டுள்ளது.
விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பஸ்களும் காப்பெற் இடப்பட்ட பக்கமாக மிக வேகமாக வந்துள்ளன. கற்பகப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீதி வளைவில் திரும்பியபோது யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்துகொண்டிருந்த பஸ்ஸைக் கண்ட மினிபஸ் சாரதி விபத்தைத் தவிர்ப்பதற்காக கடுமையாக முயன்றதாகவும், ஆயினும் கணப்பொழுதில் இரு பஸ்களும் நேருக்கு நேர் பெரும் சத்தத்துடன் மோதி உருக்குலைந்ததாகவும் விபத்தில் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
விபத்தை அடுத்து அங்கு கூடிய மக்கள் உடனடியாக விபத்தில் காயமடைந்தவர்களை பெரும் சிரமப்பட்டு மீட்டு வாகனங்களில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தினர். மினிபஸ்ஸின் சாரதியை மீட்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது.
மினிபஸ்ஸின் முன்பக்கம் முற்றாகச் சிதைந்து சிதலமானது. அத்துடன் தென்னிலங்கை பஸ்ஸின் சாரதி அமரும் இருக்கை உள்ள பக்கம் கடும் சேதத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் மினிபஸ் சாரதியான உடுப்பிட்டி ஆதியமலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அன்னலிங்கம் அமிர்தராஜ் (வயது34), அந்த பஸ்ஸில் பயணித்தவரான வேலாயுதம் செந்தில்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவேளை உயிரிழந்து விட்டனர்.
காயப்பட்டவர்களில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்தார். எனினும் அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை.
இந்த விபத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த சின்னையா சுப்பிரமணியம் (வயது58), கோப்பாயைச் சேர்ந்த குமரேசசர்மா (வயது29), வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த என்.சிவயோகநாதன் (வயது49), மினிபஸ் நடத்துனரான அல்வாய் வடக்கைச் சேர்ந்த கணேசரத்தினம் திவாகரன் (வயது20), தொண்டமனாறு, சந்நதி கோயிலடியைச் சேர்ந்த புஸ்பகுமார் தயாளினி (வயது28), யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த நாகேஸ்வரி (வயது35), வல்வெட்டித்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த ஜயந்தகுமார (வயது35), தென்னிலங்கை தனியார் பஸ் சாரதியான கே.துஷார (வயது40), அந்த பஸ்ஸின் நடத்துநர் ஆகியோர் கடும் காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
இருபாலையில் கோரவிபத்து மினிபஸ் சாரதி உட்பட 3 பேர் சாவு;
ஞாயிறு, அக்டோபர் 07, 2012
செய்திகள்