வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
பாகிஸ்தானில்
தலிபான்களால் சுடப்பட்ட பள்ளிச் சிறுமி மலாலாவின் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம்
ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவி
மலாலா யூசுப்சாய்(14), தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். பிர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் மலாலாவின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றனர். மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மலாலா உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கொண்டுவர மருத்துவர்கள் நன்றாக கவனித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மலாலா சுடப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், அவரது தந்தை ஜியாவுதின் யூசுப்சாய் நடத்திவரும் பள்ளிக்கு மாணவிகளின் வருகை குறைந்திருப்பதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதனை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளதுடன், செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளால் பொதுமக்கள் மத்தியில் பள்ளி குறித்து பயம் ஏற்பட்டுள்ளது. எனவே செய்தியாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என முதல்வர் மரியம் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே மலாலாவை சுட்ட தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், எங்களுக்கு எதிராக பேசியதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பாராட்டி பேசி வந்தார். அதனால் தான் சுட்டு தள்ளினோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் விசாரணையில், மலாலாவை சுட்டது அப்துல்லா என்பவர் தான் என தெரியவந்துள்ளது. |
வெள்ளி, 19 அக்டோபர், 2012
மலாலாவை சுட்டது ஏன்? புதிய தகவலை வெளியிட்டனர் தலிபான்கள்
வெள்ளி, அக்டோபர் 19, 2012
செய்திகள்