siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெறும் உலக தமிழர் மகாநாடு

 
Sunday, 28-10-2012,By.Rajah.இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு உலகம் முழுவதிலுமுள்ள தமிழர் விடுதலைப் போராட்ட சக்திகள் அனைவரும் ஒரேகுரலில் வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மகாநாடு....
.....ஒன்றை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தவிருக்கின்றன.
தாயகத்திலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உலகம் பூராகவுமுள்ள புலம் பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற இருப்பதுடன் முக்கிய அரசியல் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவிருக்கின்றனர்.
2009ம் ஆண்டு மாபெரும் மனிதப்படுகொலையுடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்முதல் இன்று வரை நாம் எமது உறவுகளின் மரணங்களை கணக்கிட்டு வருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுமார் 40,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் யுத்தத்தின்போது காணமல் போனவர்களின் எண்ணிக்கை 146 ,000 ஐயும் விட அதிகமாகும். யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் வகை தொகையாக சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு கொள்ளப்பட்டமை தொடர்பில் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
போதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் கால தாமதம் செய்யாமல் உடனடியாக சர்வதேச சுயாதீன விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐ. நா. மற்றும் சர்வதேச சமூகத்தை உலக தமிழ் மக்கள் ஒரே குரலில் வலியுறுத்துவதற்கும் அதற்கான வழி வகைகள் குறித்து ஆராய்வதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 2013 கூட்டத் தொடரின்போது சிறி லங்காவுக்கெதிராக சர்வதேச சமூகம் கடும் நிலைப்பாட்டை எடுக்கச் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக இந்த மகாநாடு அமையும்.
தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் , தமிழ்நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளினதும் மக்கள் பிரதிநிதிகள், உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக அமைபுக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், தமிழகத்து கலைத்துறை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று பல்வேறுபட்ட தரப்பினர் இந்த மகா நாட்டில் கலந்து கொள்வர்.
இம்மாநாட்டின் இரு முக்கிய அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளன. மகா நாட்டில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான இராப்போசன விருந்தும், மக்கள் சந்திப்பும் தனித் தனியாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது.இவை பற்றிய கால நேர விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த மகாநாடு மகத்தான வெற்றிபெறுவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கிறது. இந்த மகாநாடு தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது