06.11.2012.By.Rajah.சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப நடத்த முடியும் என நினைத்த சிறீலங்கா, சர்வதேசத்தின் பலத்தை இப்போது தான் உணர்ந்து பயப்பட ஆரம்பித்துள்ளது என்று சிறீலங்காவிற்கான கனடியப் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தமிழர்களினூடான சந்திப்பின் போது தெரிவித்தார்.
கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கலந்து கொண்ட கனடாவின் சிறீலங்கா விவகாரத்திற்கான உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிக்கும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர், தாங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட விஜயம் தொடர்பான அறிக்கையை கனடிய அமைச்சரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது எனவும் கனடா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேச நாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் றிக் டிக்ஸ்ரா தெரிவித்தார்.
வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், தமிழர்கள் சம பிரஜைகளாக வாழக்கூடிய வழியேற்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தாங்கள் மீளாய்வு செய்வோம் என்றும் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் கனடாவிற்கு திருப்தியான முடிவு ஏற்படாதபட்சத்தில் கனடியப் பிரதமர், இலங்கையில் அடுத்தவருடம் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யமாட்டார் எனவும் றிக் டிக்ஸ்ரா குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் சுமார் 25 வருடங்களாக இயங்கும் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட பல பிரமுகர்களும் கலந்து கொண்டு, கனடா-இலங்கை விவகாரத்தில் செயற்படுத்த வேண்டிய செயற்பாடுகள் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்
0 comments:
கருத்துரையிடுக