யாழ். குடாநாட்டில் கடந்தவாரம் இடம்பெற்ற திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் சுமார் 20 லட்சம் ரூபா, நகைகள் உட்பட 21 லட்சத்து 11 ஆயிரத்து 810 ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன என்று யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்தவாரம் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்களில் திருட்டு, கொள்ளை என 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 4 முறைப்பாடுகள் 19 லட்சத்து 65ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் தொடர்பானவை.
அதிக அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன. வீடு உடைத்து இந்தத் திருட்டுகள் இடம்பெற்றுள்ளன.
யாழ். கஸ்தூரியார் வீதியில் கடந்த 20ஆம் திகதி வீடு உடைத்து 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் உடைமைகள் திருடப்பட்டுள்ளன. காரைநகர் மடத்தடி வீதியில் கடந்த 20ஆம் திகதி 2 லட்சத்து 25ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன.
யாழ். முனீஸ்வரன் வீதியில் கடந்த திங்கட்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்த பெண் அணிந்திருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் தெஹியந்தக்கண்டியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டது. அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
யாழ். நாவலர் வீதியில் வீடு உடைத்து 24ஆயிரத்து 130ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன. சங்கானையில் கடந்த 27ஆம் திகதி 8ஆயிரம் ரூபா பெறுமதியான சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
கரம்பன் சண்முகநாதன் பாடசாலையில் இருந்து டி.வி.டி. பிளேயர், வயர்கள் உட்பட 53ஆயிரத்து 680 ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன. அளவெட்டி மேற்கில் கடந்த 28ஆம் திகதி தேவாலாயம் ஒன்றிலிருந்து 28ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளன.
இளவாலை பண்டத்தரிப்பில் கடந்த திங்கட்கிழமை 23ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டுள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்
0 comments:
கருத்துரையிடுக