siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 26 ஜூலை, 2012

விஸ்வரூபமாய் எழுந்த கோபுரம்

 

 

மறுநாள் காலை, வழக்கம்போல காவிரியிலிருந்து நீர் எடுத்துவரப் போன லோகசாரங்கரும் மற்றவர்களும் பாணன் தன் வழக்கம்போல ரங்க பக்தியில் பாடி, ஆடி திளைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். நெற்றிக் காயத்தில் ரத்தம் உறைந்திருந்தது. அதைப் பார்த்த முனிவருக்கு அரங்கனே அப்படி காயத்துடன் ஆடுவது போலத் தெரிந்தது. உடனே பாணனிடம் போய் தன் செயலுக்குத் தான் வருந்துவதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் பெருமாள் உத்தரவுப்படி தான் அவரை சுமந்து அரங்கன் கருவறைக்கு அழைத்துச் செல்வதாகவும் தழுதழுத்த குரலில் சொன்னார். ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றிருந்த பாணனை அப்படியே தூக்கித் தன் தோளில் வைத்துக்கொண்டு, கோயிலுக்குத் திரும்பினார், முனிவர்.

எந்த தெய்வத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் ஏங்கித் தவித்தாரோ, அந்த தெய்வத்துக்கு நேர் எதிரிலேயே தான் இருப்பதைக் கண்டு உள்ளம் உவகையால் பொங்க, கண்கள் அந்த உணர்வினை ஆறாகப் பெருக்கிக் காட்டின. ரங்கனுடைய கண், வாய், செவி, திருமுகம், திருவுந்திக் கமலம், இடுப்பு, கால், பாதம் என்று அங்கம் அங்கமாக தரிசித்து பேரானந்தம் அடைந்தார், பாணாழ்வார். அந்தப் பேரழகு, அவரை, அந்த அங்கங்களை வர்ணித்து அங்கேயே 10 பாசுரங்களைப் பாட வைத்தது. ‘அமலனாதிப்பிரான்...’ என்று தொடங்கும் அந்தத் தொகுப்பு, இன்றும் பக்தர்களால் பாடி மகிழப்படுகிறது. அரங்கனைப் பார்த்த நிறைவில், அப்போதே அவனுடைய கழலடியில் சரணடைந்து மோட்சம் எய்தினார் பாணாழ்வார்.

திருப்பாணாழ்வார் உள்ளிட்ட பதினோரு ஆழ்வார்கள் இந்த அரங்கனுக்கு மங்களாசாசனம் அணிவித்திருக்கிறார்கள். ஆழ்வார் பட்டியலில் ஒருவரான மதுரகவியாழ்வார் தன் குருநாதரான நம்மாழ்வாரையே திருமாலாக பாவித்ததாலும் அவரைத் தவிர வேறு யாரையும் பாடாததாலும் அரங்கன் மீது இவர் பாசுரம் எதுவும் இயற்றவில்லை. மீதி 11 பேர், மொத்தம் 247 பாடல்களால் அரங்கன் புகழை அவனியெங்கும் பரப்பியிருக்கின்றனர். பிரமாண்டம் என்பதற்கு சரியான உதாரணமாக ஸ்ரீரங்கம் கோயிலைச் சொல்லலாம். மொத்தம் எட்டு திருச்சுற்றுகள், எட்டு திருமதில்களால் சூழப்பட்ட எட்டு பிராகாரங்கள். முதலில் ஏழு திருச்சுற்றுகள்தான் இருந்தன. ஆனால் அந்த ஏழையும் வளைத்தாற்போல, அந்த ஏழு பிராகாரங்களையும் பாதுகாப்பதுபோல இந்த எட்டாவது சுற்று அமைந்துள்ளது. என்ன பொருத்தம்!

நாராயணனின் அஷ்டாக்ஷர மந்திரத்தின் எட்டு அட்சரங்களே இப்படி எட்டு மதில் சுவர்களுடன் கூடிய பிராகாரங்களாக உருவாகியிருக்கின்றனவோ! இந்த எட்டாவது திருச்சுற்றை அடையவளைந்தான் திருச்சுற்று என்கிறார்கள். தன் பாதுகாப்பு வளையம் என்ற அடைப்புக்குள், அணைப்புக்குள், மீதி ஏழு பிராகாரங்களை காக்கிறது இந்த எட்டாம் திருச்சுற்று. தெற்குப் புற கோபுரத்தின் வழியாக கோயிலினுள் நுழையலாம். மிக உயர்ந்த கோபுரம் இது. இந்த வகை கோபுரங்களில் ஆசியாவிலேயே மிக உயரமானது. இதனை ராயர் கோபுரம் என்றழைக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதன் நன்றியை இப்படி, இன்றளவும் நினைவுகூர்கிறார்கள். ஆனால் அவர் காலத்திலும் அதற்குப் பலநூறு வருடங்களுக்குப் பின்னாலும் இந்த கோபுரத்தை முடிக்க முடியாத வேதனையை ‘மொட்டை கோபுரம்’ என்றழைத்து அமைதிப்படுத்திக்கொள்ள முயன்றார்கள்.

தன் ஆட்சி காலத்தில் ஒரே சமயத்தில் 96 கோயில் கோபுரங்களை நிர்மாணிக்க முயற்சி எடுத்துக்கொண்ட கிருஷ்ண தேவராயர், தலைக்கோட்டைப் போரில் தோல்வியைத் தழுவியதும் பெரும்பாலான கோபுரங்கள், மொட்டை கோபுரங்களாகவே நின்று, துக்கத்தை அனுஷ்டித்தன. ஆனால் அரங்கனின் திருவுளம் வேறாக இருந்தது. அவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள, அஹோபில மடத்தின் 41வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் சுவாமிகளுக்கு உற்சாகமூட்டினார். புதுத் தெம்பு பெற்ற ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கத்துக்கே வந்து பல்லாண்டுகள் தங்கினார். எத்தனையோ இடர்களையும் எதிர்ப்புகளையும் மீறி, இந்த மெகாப் பெரிய கோபுரத்தைக் கட்டி முடித்து, தன் பக்தி சேவையின் உச்சத்தை நிரூபித்தார்.

இந்த கோபுரத்தினுள் நுழையும் நம்மை ஆஞ்சநேயர் தனி சந்நதியில் அமர்ந்தபடி வரவேற்பது சிலிர்க்கச் செய்கிறது. இந்த ஆஞ்சநேயர் தவிர, கண்ணனுக்கும் இங்கே தனி சந்நதி உள்ளது. வலது பக்கத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் அவருக்கான சந்நதியில் ஆசி வழங்குகிறார். இவரைப் ‘பத்தினி ஆழ்வார்’ என்று அழைத்துச் சிறப்பிக்கிறார்கள். ஏன்? இவர் அரங்கனைத் தவிர வேறு எந்தப் பெருமாளையும் பாடியதில்லை, அதனால்தான்! இந்தக் கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைத்து, அரங்கனுக்கு மலர்க் கைங்கரியம் செய்து வந்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். அந்த சமயம் திருமங்கையாழ்வார் அந்தக் கோயிலுக்கு மதில் சுவர் கட்டி வந்தார். சுவர் தொடர்ந்த வழியில் நந்தவனம் குறுக்கிட்டது.

உடனே அந்த நந்தவனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சுவரை வளைத்துச் சென்று நிர்மாணித்தார் திருமங்கையாழ்வார். இந்தப் பெருந்தன்மைக்கு நன்றி செலுத்தும் விதமாக, தான் மலர்க் கொய்யப் பயன்படுத்திய கருவிக்கு ‘அருள்மாரி’ என்று பெயரிட்டார், தொண்டரடிப் பொடியாழ்வார். இது, திருமங்கையாழ்வாரின் பட்டப் பெயர்களில் ஒன்று. ஆண்டாள் சந்நதியில் வாசலில் இருபுறமும் துளசி மாடங்கள். ஆண்டாள் துளசி மாடத்துக்கு கீழேதான் பெரியாழ்வாருக்குக் கிடைத்தாள் என்ற தகவலை எடுத்துக்காட்டுவதற்காக! பிராகார வழிநடையில் மிகப் பெரிய பலகை ஒன்றை வைத்திருக்கிறார்கள். இந்தப் பலகையில் இந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் முழு வரைபடமும் அந்தந்த பிராகாரங்களில் இருக்கும் 49 தெய்வ சந்நதிகளின் பட்டியலும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்தப் பலகையில் மீது பறவைகளின் எச்சம் விழுந்து விவரத்தை முழுமையாக அறிய விடாமல் செய்திருக்கின்றன. இதனால் கொஞ்சம் வருத்தப் பெருமூச்சு விட்டுக்கொண்டே தொடர்ந்து நடந்தால், ‘பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளை தரிசிக்கப் போகிறீர்களா, இந்தாருங்கள் அமிர்தம்’ என்று சொல்வதுபோல அமிர்த கலச கருடாழ்வார் நம்மை அழைக்கிறார். இவர் சந்நதிக்குள் நுழைந்ததும் வலது கையில் அமிர்த கலசத்தை ஏந்தி ஓவியமாகக் காட்சி தரும் கருடாழ்வார், வலது பக்கத்தில் அர்ச்சாவதாரமாகவும் திகழ்கிறார். சாளக்கிராமத்தில் உருவான இவரது மேனி மீது எட்டு சர்ப்பங்கள் தவழ்ந்தபடி இருக்கின்றன. தன் சிற்றன்னையிடமிருந்து தன் தாயைக் காப்பதற்காக அமிர்தத்தை சுமந்து வரும் கோலம் அழகாக மிளிர்கிறது. என்னென்ன கிழமையில் இவரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்

0 comments:

கருத்துரையிடுக