siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 26 ஜூலை, 2012

இது என்னோட நேரம்... உசேன் போல்ட் உற்சாகம்

 

 


லண்டன் : ‘ஒலிம்பிக் போட்டிக்கும் எனக்குமான உறவு ஈடு இணையில்லாதது. விமர்சனங்களை தவிடுபொடியாக்கி லண்டனிலும் சாதிப்பேன்’ என்று ஓட்ட நாயகன் உசேன் போல்ட் உற்சாகமாகக் கூறியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (25). தடகளத்தில் தன்னிகரில்லாத போட்டியாகக் கருதப்படும் 100 மீ. ஓட்டம், 200 மீ. மற்றும் 4 ஙீ 100 மீ. தொடர் ஓட்ட உலக சாம்பியன்ஷில் 5 தங்கம், ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற மகத்தான சாதனையாளர். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 21 வயது இளம் வீரராகக் களமிறங்கிய இவர் (உயரம்: 6 அடி 5 அங்குலம்) அடுத்தடுத்து தங்கங்களை அள்ளியபோது உலகமே அதிசயித்தது.

லண்டன் ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கங்களை தக்கவைத்து புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் தென் கொரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தவறான தொடக்கத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் தேர்வு ஓட்டத்தில் சக ஜமைக்கா வீரரான ஜோகன் பிளேக்கிடம் தோற்று 2வது இடம் பிடித்ததாலும், லண்டனில் அவருக்கு வாய்ப்பு குறைவு என முன்னாள் பிரபலங்களும் விமர்சகர்களும் கணித்துள்ளனர்.

இந்த நிலையில், லண்டன் ஒலிம்பிக் குறித்து போல்ட் நேற்று கூறியதாவது: எனக்கு முன்பாக பல மகத்தான வீரர்கள் இருந்துள்ளனர். எனக்கு இணையான வீரர்களும் இருக்கின்றனர். ஆனால், ஒலிம்பிக் என்று வந்துவிட்டால் என்னை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. விமர்சனங்களை நான் ஒருபோதும் பொருட்படுத்துவது இல்லை.
எனக்கு தெரிந்தது எல்லாம் ஓட்டம், கடுமையான பயிற்சி மட்டுமே. ஒரு சாம்பியனாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறேன். லண்டன் ஒலிம்பிக்கிலும் நிச்சயம் சாதிப்பேன்.

இது என்னுடைய நேரம், என்னுடைய தருணம், எனக்கான ஆண்டு... மற்றவர்களை விட எல்லா வகையிலும் சிறந்தவன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன். அதற்கான தன்னம்பிக்கையும் முயற்சியும் என்னிடம் உள்ளது. நாளுக்கு நாள் என்னுடைய உடல்தகுதி நன்கு மேம்பட்டு ஆற்றல் அதிகரித்து வருகிறது. சக வீரர் பிளேக் மட்டுமல்ல, அமெரிக்க வீரர்களும் எனக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்பதை உணர்ந்துள்ளேன்.

இவ்வாறு போல்ட் கூறியுள்ளார். ஆண்கள் தடகளம் 100 மீட்டர் ஓட்டத்தில் நட்சத்திர வீரர்கள் உசேன் போல்ட், ஜோகன் பிளேக், அசபா பாவெல், டைசன் கே, ஜஸ்டின் காட்லின் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக