siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 18 ஆகஸ்ட், 2012

பாகிஸ்தானில் விமானப்படைத் தளம் மீது தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல்

18.08.2012பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களில் ஒன்றான காம்ரா படைத் தளம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீரெனத் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து விமானப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். படைத்தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் எப்-17 ஜெட்விமானங்கள் உட்பட போர்விமானங்கள் பல சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் நாட்டின் முக்கிய விமானப் படைத் தளங்களில் ஒன்று காம்ரா தளம். இது தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே  தீவிரவாதிகள் இத்தளத்தைக் கைப்பற்ற அடிக்கடி தாக்குதல் நடத்தும் முக்கிய இலக்காக இத்தளம் இருந்து வருகிறது. காம்ரா தளத்தில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதுதான் தீவிரவாதிகளின் இலக்குக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் இராணுவத்தினரைப் போல் சீருடையணிந்திருந்த தீவிரவாதிகள் 10 பேர் காம்ரா தளத்துக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தினர் .இதையடுத்து படைத்தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினரிடையேயான மோதல் 3 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
மோதலின் முடிவில் 6 தீவிரவாதிகளும் 2 படையினரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதர தீவிரவாதிகள் தப்பியோடியது பற்றி அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானி, பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்திருந்தார். கயானியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.