siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மேலை நாட்டுக் கானல் நீர் ...!

25.09.2012.By.Rajah.எள்ளளவு தமிழ் - கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ; காட்சி ஊடக கடல்களில் அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...! மொழியின் நலிவு - மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர் இனத்தின் அழிவு - மொழியின் நலிவினில் துவக்கம்...! மொழியில் மட்டுமா கலப்பு - இன்று அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ; உணவில் கலப்பு - நோயின் பிறப்பு ; பண்பாட்டில் கலப்பு - சமூக சீரழிவின் தொகுப்பு ; - இவையே இன்றைய தீரா அருவருப்பு...! பிறமொழிகளின் ஆளுமைக்கு காரணம் - அவை வருமானம் தரும் மொழிகளாம் ; வருமானம் தரும் - ஆனால் அவை தன்மானம் தருமா...? அதைப் பற்றி - இங்கு யாருக்கு கவலை...!? வருமானம் தரும் மொழி... - அது ஒரு புறம் இருக்கட்டும் ; ஆயினும் - இந்த நாறிய மேலை நாட்டு - நாகரிகம் என்ன தரும்...?! நடையில், உடையில் பழகும் பண்பில், பாசத்தில் - சிறந்த நட்பில் - அழகிய காதலில் - இனிய உறவில் - அட அன்பில் கூட - நாம் அன்னியப்பட்டுப் போனோம் - நம் பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து ! கவின்மிகு - நம் பண்பாட்டுச் சோலை ; ஏன்...? - இந்த மேலைக் கானல் நீர் - பாய்ச்சும் வேலை...! பாரதி போல்... தேவநேய பாவாணர் போல்... பன்மொழிப் புலமை வேண்டும் - பன்னாட்டுக் கலைகள் யாவும் - பழகிடல் வேண்டும் - அவை நம் மொழியின் , நம் பண்பாட்டின் புகழினை எந்நாட்டிலும் பேசிடுவதற்கே...! நம் - அண்டை கன்னடத்தில் ஓர் அரும் நிகழ்வு... கோடிக்கணக்கான மதிப்பில் - வேளாண் துறை திட்டம் - அதன் கருத்துரு ஆங்கிலத்தில் எழுதியவர்களுக்கு - 1000 ரூபாய் தண்டம் விதித்தது - உத்தர கன்னட மாவட்ட நிர்வாகம் ; கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டதால்...! இங்கும் ஒரு நிகழ்வு அதே நேரத்தில்... ஓசூருக்கு அருகில், ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் - தம் தாய் மொழித் தமிழில் பேசியதற்கு - தண்டம் விதித்தது கல்லூரி நிர்வாகம் ; இது போல் - இங்கு நாள்தோறும் நிகழ்வுகள் ஆயிரம்...! மனவேதனையுடன்... கடுந்தவம் தானிருந்து கடவுளிடம் வரம் கேட்டேன் ! தனித் தமிழுக்கு ‘பாதுகாப்பு’ தா என்று...! என்ன... தனித் தமிழுக்கு 'பாதுகாப்பா...?’ இவ்வரம் தர எம்மால் இயலாது - வேறு வரம் கேள் என்றே - புன்னகைத்து சென்று விட்டான் - எம் செந்தமிழ்க் கடவுள்...! ஏதும் விளங்காமல் வீடுவந்தேன் ; கேட்ட வரமே பிழை என்று - பிறகே உணர்ந்தேன்...! ‘பாது’ என்பதே - ‘காப்பு’ எனும் பொருள் தரும் - வடமொழிச் சொல்லே ! தமிழ் மொழியின் ஊடே இருந்து - குழி பறிக்கும் - இம் மொழிக் கலப்பினை - நலமில்லா நாறிய மேலை நாகரிகக் கலப்பினை - அடியோடு களையெடுக்க ; -மீண்டும் தவம் இருக்கிறேன் - பிழையில்லா வரம் கேட்க.