siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா

 
25.09.2012.By.Rajah.நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்க; ஒரு கவிஞரின்பெயரேஅ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின் பெயரைக் காணும்போதெல்லாம் ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம். கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா, ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு )



கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகங்கள் கொண்டவர் வெண்ணிலா. மிக முக்கியமாக பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இருக்கிறது.

வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது வாழ்வை வாசித்தார். இதோ - சென்னையில் பதிவான வெண்ணிலாவின் வெளிச்சம்.


நவீன இலக்கியத்தளம் விட்டு இடம்பெயரும் எண்ணமில்லையா?

வாசிக்கத் தெரிந்த நாள் முதல் அப்பா வாசிக்கச்சொன்னவற்றை மட்டுமே வாசித்தேன். பதின் மூன்று வயசுக்கு பிறகு புத்தகபிரியை ஆனேன். கிடைத்ததை எல்லாம் வாசித்தேன். இருபது வயசுக்கு பின் எனது பார்வை நவீன இலக்கியம் பக்கம் திரும்பியது. இதுதான் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு நவீன இலக்கியத்தின் மீதான ஆர்வம்தான் எனக்குள் இருக்கிறது. அது குறித்துதான் எனது தேடலும் இருக்குது. எப்போதும் என்னை நவீன இலக்கியவாதி என்று வெளிப்படுத்திக்கொள்ளவே விருப்பம்.


அதிகம் படிக்கும் பழக்கம் இருக்கு. ஆனால் அதிகம் படைப்பதில்லையே ஏன்?

அப்பா திராவிடர் கழகத்தில் இருந்ததால் பெரியார் புத்தகங்களை நிறைய வாசிக்கச் சொல்வார். வாசித்து முடித்த பிறகு அந்த புத்தகம் குறித்து கேள்விகள் கேட்பார். நான் பதில் சொல்வேன். அந்த கேள்வி பதில் பொழுதுகளே நல்ல விவாதமாக அமையும். வாசிப்பது அது குறித்து விவாதிப்பது என்று இருந்துவிட்டேன். நாமும் படைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது.நான் சின்ன வயதில் இருந்தே கவிதை எழுதத்தொடங்கி விட்டேன் என்று எல்லோரும் சொல்லும் பதிலை என்னால் சொல்லமுடியாது. ஏன் தெரியுமா? நான் எழுதத்தொடங்கியதே இருபத்து ஏழு வயதில்தான்.



எழுதத்தொடங்கிய பிறகும் சில பதிவுகள்தான் செய்திருக்கிறேன். ‘நீரில் அலையும் முகம்’, ’ஆதியில் சொற்கள் இருந்தன’கனவை போலொரு மரணம்’ என்று மூன்று கவிதை தொகுப்புகளும் ‘பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்’ என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் ‘கனவிருந்த கூடு’என்ற காதல் கடிதங்களின் தொகுப்பும் பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பாக’மீதமிருக்கும் சொற்கள்’ ஆகியவைதான் எனது பதிவுகள்.


நிறைய படிக்க வேண்டும் நிறைவான படைப்புகளை தரவேண்டும் என்று விரும்புகிறேன். இதுதான் நான் அதிகம் எழுதாமல் இருப்பதற்கான காரணம்.


தலைப்பில்லா கவிதைகளே எழுதிவருகிறீர்களே; தலையாய காரணம் என்ன?

கவிதைகளை ஒரு வட்டத்துக்குள் வைக்க விருப்பமில்லை. இஷ்டத்திற்கு இருக்க வேண்டும் என்பதால்தான் தலைப்பு வைப்பதில்லை. இஷ்டத்திற்கு என்று சொன்னது - சுதந்திரம்!. அப்புறம் முக்கியமான ஒன்று... தலைப்புகள், இது குறித்துதான் என்பதை உணர்த்திவிடுகிறது. எது குறித்து என்கிற தேடல் இருக்க வேண்டும். அந்த தேடலில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அது எனக்கு பிடிக்கும். அதனால்தான் அப்படி எழுதுகிறேன்.மற்றவர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.



ஒரு உறைக்குள் இரு வாள் என்பது மாதிரி ஒரு வீட்டுக்குள் இரு கவிஞர்கள் இருக்கிறீர்கள். உரசல்கள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திடுமே?



இருவரும் கவிஞர்கள் என்பதாலும் காதல்திருமணம் என்பதாலும் நல்ல புரிதல் இருக்கு. மற்றபடி இலக்கியம் குறித்தான சூடான விவாதம் அடிக்கடி நிகழும். விவாதத்தில் ஆவி பறக்கும். எனது எல்லாக் கவிதைகளையும் அவர் பாராட்டியிருக்கிறார். அவரின் சில கவிதைகளை மட்டுமே நான் பாராட்டியிருக்கிறேன். ஹைக்கூ கவிதைகளை அவர்(மு.முருகேஷ்) எழுதிக்குவிக்கிறார். எனக்கு அவற்றில் விருப்பமில்லை. அப்படியிருந்தும் பதினைந்து ஹைக்கூ கவிதைகள் எழுதியிருக்கிறேன்.


காதலித்தால் கவிதை வரும் என்பார்கள். கவிதை எழுதினாலும் காதல் வரும் என்பார்கள். நீங்க சொல்லுங்க. கவிதை வந்ததும் காதல் வந்ததா? காதல் வந்ததும் கவிதை வந்ததா?

காதல் என்னை காதல் கடிதங்கள்தான் எழுதவைத்தது. திருமணம்தான் என்னை கவிதை எழுத வைத்தது. எனது முதல் தொகுப்பே காதல் கடிதங்களின் தொகுப்புதான். ’கனவிருந்த கூடு’ எனும் அத்தொகுப்பில் இருக்கும் கடிதங்கள் அனைத்தும் ஆறு மாதங்களாக நான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களே. இத்தொகுப்பையும் திருமணத்திற்கு பிறகே வெளியிட்டேன்.



தோழர்களுடன் இணைந்து ‘பூங்குயில்’ சிற்றிதழ் நடத்தினேன். அது சம்பந்தமான விழாக்களுக்கு அடிக்கடி அவர் வருவார். ஆரம்பத்தில் இலக்கியங்கள் பற்றிய விவாதமாகத்தான் இருந்தது எங்கள் பேச்சு. பின்பு காதலானது. 1991 முதல் 97 வரை நண்பர்களாக இருந்தோம். அப்புறம் ஆறுமாதம் காதலர்கள். அதன்பிறகுதான் திருமணம் பற்றிய முடிவுக்கு வந்தோம்.



என்னதான் நானும் அவரும் ஆறு வருடங்கள் பழகியிருந்தாலும் கல்யாணம் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு எனக்குள் ஒரு வித கலக்கம். ஒரே பயம். அந்த பயம்தான் என்னை கவிதை எழுத வைத்தது. அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்..என்று தொடங்கும் அந்தக்கவிதை.



ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு வரை தந்தையின் பெயரே இனிசியல். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரே இனிசியல் என்பது தமிழ்வழக்கம். இதில் ஏன் முரண்பட்டீர்கள்?



திருமணத்துக்கு பிறகு ஆணின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை. பெண்ணின் பெயரில் மட்டும் ஏன் மாற்றமிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? தந்தை பெயர்தான் இனிஷியலாக இருக்க வேண்டும் என்பதும் ஆணாதிக்கம். தாய்,தந்தை பெயர்தான் பெயருக்கு முன்னால் இருக்கவேண்டும்.



அ.வெண்ணிலா என்று அடையாளப்பட்டுவிட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளுக்கும் மு.வெ.கவின்மொழி, மு.வெ. அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி என்று பெயர் வைத்துள்ளேன். அன்புபாரதியும் நிலாபாரதியும் இரட்டையர்கள்.


இனிசியல் குறித்து பேசியதால் நினைவுக்கு வந்தது. ஆண்கள் - பெண் பெயரில் எழுதக்கூடாது என்று சொல்லிவருகிறீர்களே?

சமீப காலத்தில் பெண்களின் குரலும், தலித்துகளின் குரலும், திருநங்கைகளின் குரலும், விளிம்புநிலை மக்களின் குரலும் தனித்த அடையாளங்களைக் கொண்டவை. வரலாற்றை மீள்பார்வை செய்பவை. வரலாற்றுக்கு எதார்த்த நிலையை தருபவை. இதில் பால் வேறுபட்டு புணைப் பெயரை சூடுதல் வரலாற்று திரிபை உண்டாக்கும்.


தமிழ் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். 1927 முதல் 2000 வரையிலான கால கட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் பட்டியலை தயார் செய்து கொண்டு எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை சந்தித்தேன்.



இவர் தன் மனைவி பெயரில் எழுதியவர், இவர் தன் தாயின் பெயரில் எழுதியவர் என்று பல பெயர்களை அடித்துவிட்டார் அவர். வல்லிக்கண்ணன் போன்ற அனுபவமிக்க எழுத்தாளரின் அந்த வழிகாட்டுதல் இல்லாதிருந்தால் என் தொகுப்பில் பிழை நேர்ந்திருக்கும்.



ஆய்வு செய்துதானே ஆவணப்படுத்த வேண்டும். பின்பு எப்படி வரலாற்று திரிபு ஆகும் என்று கேட்கலாம். சில எழுத்தாளர்களுக்கு குறிப்புகள் இருக்கு. பல எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளே இல்லை. இருபத்து ஏழுகளில் எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளையே மிகுந்த சிரத்தையுடன் தேடவேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெயர் தேர்வும், புனைபெயரும் படைப்பாளியின் சுதந்திரம்தான். ஆனால், கறுப்பின எழுத்து, தலித் எழுத்து என்று சிலவற்றிற்கு தனித்த அடையாளம் இருக்கு. பெயர் மாற்றி எழுதுவதால் அடையாளங்கள் வேறுவிதமாக அர்த்தத்தை தந்து விடுகின்றன.

இன்றைக்கு ஒடுக்கப்பட்ட, கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பால்வேறுபாட்டை/இன வேறுபாட்டை அடையாளப்படுத்தும் குரல்களும் ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் எழுதுபவன் சுயம் பற்றிய அடையாளமும் தேவைப்படுகிறது. பொதுவான இலக்கியம் படைப்பவர்கள் வரலாற்று திரிபு ஏற்பட காரணமாக இருக்கக்கூடாது.


பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

பெயர் சொல்லும் பிள்ளை என்பது போல் எழுத்தாளர்களின் பெயர் சொல்லும் கதைகளும் இருக்கின்றன. சில படைப்புகள் படைப்பாளியைப்பற்றி அறிய ஆவலைத்தூண்டும். சிறுகதைகளை அதிகம் படிக்கும் நான் அச்சிறுகதைகளின் ஆசிரியர்கள் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்பினேன். அதற்கான முயற்சியில் இறங்கினேன். இந்த தேடல் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் அமையும் என்கிற நம்பிக்கை இருந்ததால் தேடலை தீவிரப்படுத்தினேன். மூன்று வருட தேடலுக்கு பிறகுதான் ‘மீதமிருக்கும் சொற்கள்’ உருவானது.

எழுத்தாளர் அனுத்தமாவுக்கு இப்போது 90வயசு. சரியாக பேச முடியாத நிலையில் இருந்தார். சிரமப்பட்டுத்தான் அவரும் பேசினார்; நானும் குறிப்புகளை சேகரித்தேன். மூப்பின் காரணமாக சரியாக பேசமுடியாத நிலையிலும் காது கேளாத நிலையிலும் சுயநினைவு சரியாக இல்லாத நிலையிலும் இருந்தார் கிருத்திகா. அவரது உறவினர்களின் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சம் பேச வைத்தேன். இந்த தொகுப்பில் இருக்கும் பலர் இப்போது உயிருடன் இல்லை. இந்நூல் வருவதற்கு உதவிய வல்லிக்கண்ணன், சிட்டி முதலான பெரும் படைப்பாளிகள் இந்நூல் வெளிவந்தபோது உயிருடன் இல்லை. மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இப்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறாரே; சந்தித்தீர்களா?

‘மீதமிருக்கும் சொற்கள்’-க்காக அவருடன் தொலைபேசியில் தான் பேசினேன். இப்போது அவர் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். பிள்ளைகள் இல்லாததால் கணவர் இறந்தபிறகு ( 2002ல்) சொந்தத்தை நம்பி இருந்திருக்கிறார். இருந்ததை எல்லாம் சொந்தங்கள் பிடிங்கிக்கொண்டதால் இந்த என்பத்து மூன்று வயதில் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்.



இருபத்தைந்தில் திருச்சி முசிறியில் பிறந்த இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உப்பள மக்களின் வாழ்க்கை பற்றி எழுதிய ‘ வேருக்கு நீர்’ படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அவருக்கா இந்த நிலமை என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கு. அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது வெறும் அனுதாபம் குறித்த சந்திப்பாக இருக்கக்கூடாது. அர்த்தமுள்ள சந்திப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். மீதமிருக்கும் சொற்களில் அவரை வைத்துவிட்டாலும் இன்னும் அவரைப்பற்றிய பதிவுகள் ஏதும் பண்ணனும் என்று விரும்புகிறேன்.

தேவதாசிகளின் போராளி ராமாமிர்தத்தின் போராட்டங்கள் குறித்தும் வரலாற்றில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என நீங்க எழுதியிருப்பதும் முக்கியமான பதிவு. ராமாமிர்தம் பற்றி அறிய முற்பட்டது எப்படி?

மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை என்று மூவலூர் ஆ.ராமாமிர்தம் எழுதிய நாவலை படித்தேன். அந்த நாவல் கிட்டத்தட்ட சுயசரிதை போன்று தன் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலே அவரைப் பற்றி, தேவதாசிகளும் ராமாமிர்தத்தின் போராட்டங்களும் என்ற கட்டுரை எழுத வைத்தது. தேவதாசிப்பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக அவர்களையே உறுப்பினர்களாக கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த சங்கமே இசை வேளாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட்டு இசை வேளாளர் மாநாடு, தேவதாசிகள் மாநாடு போன்றவற்றை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர். பொட்டு கட்டுதல், சுமங்கலி சடங்கு முதலான சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாக்கப்பட்டிருக்கிறாள்.


கோயிலில் நாட்டியப்பெண்ணாகவும் தெய்வத்தின் முன்னால் இசைப்பாடல் இசைப்பவளாகவும் பூஜைக்கு தேவையான பணிகளை செய்பவளாகவும் தேவதாசிப்பெண்களின் முக்கியப்பணிகள் இருந்துள்ளன.

தேவதாசிப்பெண்களை இம்முறையில் இருந்து விடுவித்து அவர்களை திருமண வாழ்க்கைக்குள்