siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மகனின் திருமண மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்த தந்தை

25.09.2012.By.Rajah.தர்மபுரி நகரில் உள்ள அப்பாவு நகர் பகுதியை சேர்நதவர் நாகராஜன் (வயது-66). இவர் சிறிய அளவில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். சேவை மனப்பான்மை கொண்ட இவர் மாவட்ட கண்தான மைய துணைத்தலைவராகவும் உள்ளார். மாதம் தோறும் இவரது வருவாயில், ஒரு பகுதியை ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது இல்லத்தில் நடக்கும் திருமணம், உள்ளிட்ட சுப காரியங்களுக்கு, அன்பளிப்பு மற்றும் செய்முறைகளையும் விரும்பாத இவர், அழைப்பிதழ்களில் அன்பளிப்பை தவிர்க்கவும் என்ற வேண்டுகோளை தவறாது அச்சிட்டு வந்தார். இந்நிலையில், நாகராஜனின் மகன் ஜெகநாதன், மஞ்சுபிரியா திருமணம், கடந்த, 12-ம் தேதி கோவையில் நடந்தது. திருமண வரவேற்பு நேற்று முன்தினம் தர்மபுரியில், நடந்தது. இதற்காக உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அந்த அழைப்பிதழில், "அன்பளிப்பை தவிர்க்கவும், உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும் அன்பளிப்பை தவிர்க்க முடியாதவர்கள், சேவை பணிக்கு வழங்கலாம்' இதற்காக மண்டபத்தில், தனியாக ஒரு பெட்டி அமைக்கப்படும், அதில் நீங்கள் உங்களின் அன்பளிப்புகளை போடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை, தர்மபுரியில், வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆதரவற்றோர் சேவை பணிக்காக இரண்டு பெரிய பெட்டிகள் மணமேடை மேல் வைக்கப்பட்டிருந்தது. வரவேற்பில் கலந்து கொண்ட பலர் தாங்கள் கொடுக்க விரும்பிய தொகையை இந்த பெட்டியில் போட்டனர். இதில் 32 ஆயிரத்து, 360 ரூபாய் சேர்ந்தது. "இந்த தொகையை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற இல்லங்களுக்கும் பிரித்து வழங்கப்படும். மணமக்களுக்கு வந்த அன்பளிப்பு பொருட்களையும் அதனுடன் சேர்த்து வழங்கப்படும்,'' என, மணமகனின் தந்தை நாகராஜன் தெரிவித்தார்.