Friday28September2012தீவுப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் வாய்ப்பில்லை என்று ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ நோடா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள யோஷிகிஹோ நோடா செய்தியாளர்களிடம் கூறியது: ""இப்பிரச்னையை சீனா தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.
சீனாவில் உள்ள ஜப்பானிய பிரஜைகளை தாக்கி, அவர்களது உடமைகளைச் சேதப்படுத்துவோர் மீது அந்நாட்டு அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்காகூ தீவுகள், சர்வதேச சட்டப்படியும், வரலாற்று ரீதியாகவும் ஜப்பானின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இது தொடர்பாக சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை'' என்றார்.
கிழக்கு சீனக் கடற்பகுதியில் இந்தத் தீவுக் கூட்டங்களை டயாயூ என்ற பெயரில் சீனா அழைக்கிறது. அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்றும் உரிமை கோரி வருகிறது.
சீனா பதிலடி: ""சம்பந்தப்பட்ட தீவை தன்னுடையது என்று கூறுவதன் மூலம் ஜப்பான் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது. மற்ற நாடுகளின் இறையாண்மையை ஜப்பான் மதித்து நடக்க வேண்டும்'' என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கின் காங் கூறினார்.
முன்னதாக இரு நாடுகளின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர்களுக்கு இடையே நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடந்தது. கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்த போதிலும், தீர்வு எதுவும் ஏற்படவில்லை. எனினும், தொடர்ந்து பேச்சு நடத்தித் தீர்வு காண்பதையே விரும்புவதாக இரு நாடுகளும் கூறி வருகின்றன