siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 17 அக்டோபர், 2012

மலாலா குணமடைவார்: பிரிட்டன் மருத்துவர்கள் நம்பிக்கை

         
Wednesday 17 October 2012  By.Rajah.
தலிபான்களால் சுடப்பட்டு, பிரிட்டன் கொண்டு செல்லப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் உடல்நிலை நல்லமுறையில் தேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பிரிட்டன் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் சிறுமி மலாலா (14) உயர் சிகிச்சைக்காக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு, பர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இம்மருத்துவமனை, போரில் ஈடுபட்டு பலத்த காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.

மலாலாவின் உடல்நிலை ஒவ்வொரு படிநிலையிலும் நன்றாகக் குணமடையும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மருத்துவமனை இயக்குநர் டேவ் ரோஸர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மலாலா குணமடைய சில மாதங்களாகும். மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை அவருக்கு வழங்கப்படும். 10 ஆண்டுகள் அனுபவம் மிக்க ராணுவ டாக்டர்கள் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கின்றனர் என்றார் ரோஸர்.

தலிபான் தலைவரின் தலைக்கு சன்மானம்: சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்திய தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவரின் தலைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.31 கோடி) சன்மானம் வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தனியார் தொலைக்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: இந்த சதித்திட்டம் ஆஃப்கானிஸ்தானில் தீட்டப்பட்டுள்ளது. எல்லைக்கு அப்பாலிருந்து நான்கு பேர் வந்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளோம்.

தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதால், அந்த அமைப்பின் தலைவரின் தலைக்கு ரூ.5.3 கோடி சன்மானம் அளிக்கப்படும்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் தேடி வருகின்றன.

தலிபான்களை பாகிஸ்தானியர்கள் விரும்பவில்லை. அவர்களின் பயங்கரவாதச் செயல்களால் நாங்கள் 40ஆயிரம் அப்பாவி மக்களையும், 16ஆயிரம் படைவீரர்களையும் இழந்துள்ளோம் என்றார் ரஹ்மான் மாலிக்.

வீர தீர விருது: ரஹ்மான் மாலிக் மேலும் கூறுகையில், "மலாலாவுக்கு பாகிஸ்தான் நாட்டின் வீர தீரச் செயல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்றான "சிதாரா இ சுஜாத்' விருது வழங்கப்படும்' என்றார்.