கறிவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.
கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும். கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.
கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும். கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும்.
கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும். அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது. கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பத்தை அகற்றி , சுரத்தைக் குணப்படுத்தும்.
கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும். கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது.
பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது
0 comments:
கருத்துரையிடுக