siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 30 ஜூலை, 2012

கட்டாரில் அந்நியத் தொழிலாளர்கள் நடத்தும் சோக நாடகம்

_
30.07.2012.டோஹா விமான நிலையத்தின் வரவுப் பகுதியில் காத்துக்கொண்டிருந்தேன். மத்தியான நேரம். நிறைய விமானங்கள் இறங்கியிருந்தன. மக்கள் அலையலையாக வெளியே வந்து கொண்டிருந்தனர். பொதுவாக அரபு நாட்டினரும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுமே பயணிகள். இதில் ஏறத்தாழ எழுபத்தைந்து வீதத்தினர் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண திறனிலாத் தொழிலாளர்கள்தாம். வண்டி வண்டியாக பெட்டிகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் தள்ளிக்கொண்டு வரும் அரபு நாட்டுப் பயணியர் மத்தியில் மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு சாரை சாரையாக வந்து கொண்டிருந்த இவர்கள் வித்தியாசமாகப் பட்டனர். இவர்கள் வட இந்திய மாநிலங்களிலிருந்தும் நேபாள், பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் என்று தோற்றத்திலிருந்து கணிக்க முடிந்தது.

கட்டார் நாட்டிற்கு எதை எதிர்பார்த்து வருகிறார்கள்? இவர்களை அழைத்துக்கொண்டு வரும் ஏஜென்டுகள் என்னென்ன வாக்குறுதிகள் சொல்லி இவர்களை அழைத்து வருகிறார்கள்? இவர்கள் வருவதற்கு முக்கிய காரணம் பண மாற்றத்திலிருக்கும் பெரிய வித்தியாசம்தான். ஒரு கட்டார் ரியாலுக்கு இந்தியப் பணத்தில் 15, இலங்கைப் பணத்தில் 30 என்றெல்லாம் கிடைப்பது பெரிய கவர்ச்சிதான். சில வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்த்து சொந்த ஊரில் குறைந்தது ஒரு வீட்டைக் கட்டி விட வேண்டும்; பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து விட வேண்டும் என்ற கனவுகளோடு வருகிறார்கள்.

என்னுடைய மின்னஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. அதில் ஒரு வலைத்தளத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது அதில் பல புகைப்படங்கள் இருந்தன. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருக்கிறது என்று அப்படங்கள் காண்பித்தன. பரிதாபமான நிலை. குறுகிய இடங்களில் பலர் படுத்திருக்கின்றனர், டப்பாக்களில் மீன்களை அடுக்கி வைத்திருப்பது போல. இவ்வளவு துன்ப நிலையிலும் இங்கு தங்கிப் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தாங்கிக்கொண்டு வருவது இவர்கள் மனதில் சுமக்கும் கனவுகள்தாம்.

இவர்கள் இப்படியென்றால் மேலை நாடுகளிலிருந்து வரும் வெள்ளையர்களின் நிலை வேறு விதங்களில் பரிதாபமானது. இவர்களுக்கு ஊதியம் சற்று அதிகம் என்றாலும் வேலை நிரந்தரம் அல்ல. வேலைப் பாதுகாப்பு சுத்தமாகக் கிடையாது. ஓர் ஆங்கில நண்பருக்கு சொல்லிக்கொள்ளாமல் வேலை போய்விட்டது. அழுது புரண்டாலும் வேலை கிடையாது. இன்னொரு நண்பர் நல்ல வேலையில் இருந்தார். திடீரென்று ஒருநாள் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள். “என்னை விடக் குறைந்த சம்பளத்திற்கு நேப்பாளிலிருந்து யாரோ வந்து விட்டார்கள்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். உங்கள் நாட்டிற்குப் போய் விடலாமே என்று கேட்டபோது என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். “அங்கு நல்ல வேலை கிடைத்திருந்தால் நான் ஏன் இங்கு வரப் போகிறேன்?” அவருடைய கூற்றில் மிகப்பெரிய உண்மை உண்டு. மேலை நாடுகளிலிருந்து இங்கு(கட்டார்) வருபவர்கள் அங்கு வேலை கிடைக்காமல் வருபவர்கள் தாம். அங்குள்ள சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள். இங்கு வருகின்ற வெள்ளையர்களில் பலருக்கு பெரிய கல்வித் தகுதிகளும் இருப்பதில்லை. குறைந்த கல்வித் தகுதிகள் இருந்தாலும் தோல் நிறத்தைக் கொண்டு பெரிய பதவிகள் கிடைத்து விடுகின்றன. இவர்களைக் காட்டிலும் அதிக கல்வித் தகுதிகளும் அனுபவங்களும் உள்ள பல இலங்கையரும் இந்தியரும் குறைந்த சம்பளத்தில் வெள்ளையர்களுக்குக் கீழே பணி புரிந்து கொண்டிருக்கின்றனர்.

மிகவும் கவலையைத் தருகின்ற உண்மை என்னவென்றால், இங்கு பணியாற்றுகின்ற தொழிலாளர்களையும் இதர பணியாளர்களையும் குறித்த கரிசனை தாய் நாட்டு அரசாங்கங்களுக்குக் கிடையாது. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வரும் பணியாளர்களைக் குறித்த அக்கறை அந்தந்த நாட்டு அரசுகளுக்கு இல்லை. எடுத்துக்காட்டாக, இந்தியத் தொழிலாளி ஒருவருக்கு ஓர் அநீதி இழைக்கப்பட்டால் இங்குள்ள தூதரகம் அவருக்கு என்ன உதவி செய்யும்? ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போட மாட்டார்கள்.

எண்ணெய் வளம் பெருகிய இந்த நாட்டில், பல்வேறு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் நடத்தும் சோக நாடகம்தான் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு நாடகம் என்று புரிந்து கொள்ளாமலேயே நடித்துக் கொண்டிருக்கின்றனர். சற்று ஆழமாகச் சிந்தித்தால், மனித வாழ்க்கையே ஒரு நாடகம் தானே

0 comments:

கருத்துரையிடுக