Saturday, 25 August 2012,
அங்காடித் தெரு படத்தையடுத்து மகேஷ் நடித்த படம் 'கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு'.
இப்படத்தின் நாயகியாக புவனேஸ்வரி என்ற அறிமுக நடிகை நடித்தார். இவர்தான் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படத்திற்காக இவரின் தாயார் சம்பூர்ணம் அம்மாள் சென்னையைச் சேர்ந்த குருநாதன் (வயது 42) என்ற சினிமா பைனான்ஸியரிடம் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் தயாரிக்கும் படத்திற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் குருநாதனும் ரூ.85.50 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் அந்த பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்துள்ளார்கள். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது.
எனவே அந்த பணத்தைத் தராமல் சம்பூர்ணம் அம்மாள் ஏமாற்றி விட்டார் என சென்னை பொலிஸ் கொமிஷனர் திரிபாதியிடம் குருநாதன் நேற்று புகார் அளித்தார்.
சம்பூர்ணம் அம்மாள், அவரது மகள் நடிகை புவனேஸ்வரி ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கொமிஷனர் ராதிகா மேற்பார்வையில், துணை காவல் அதிகாரி நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதன் காரணமாக நடிகை புவனேஸ்வரி (வயது 22) நேற்று கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணையில், சினிமா தயாரிப்பு செலவுக்காக குருநாதன் ரூ.15 லட்சம்தான் கொடுத்தார்.
படம் சரியாக ஓடாததால் அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தனது வாக்குமூலத்தில் புவனேஸ்வரி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர். அவர் மீது மோசடி உட்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புவனேஸ்வரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கதறி அழுதபடியே சிறைக்குச் சென்றார்.