siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 ஆகஸ்ட், 2012

நான் (வீடியோ இணைப்பு)

25.08.2012.
விஜய் ஆன்டனி நடித்து தயாரித்திருக்கும் படம் நான். இவரது இசையில் 25வது படமாக வெளிவந்திருக்கிறது.
தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து கொள்வதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான் கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை, பொலிஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான்.
தனது சித்தப்பாவீட்டிற்கு அவன் போக கொலைகாரன் என்கிறாள் சித்தி. அதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பும் கார்த்திக் சென்னை போவதற்காக வண்டி பிடிக்கிறான். அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. தனது அருகில் உட்கார்ந்து பயணம் செய்த மெடிக்கல் கல்லூரியில் சேருவதற்காக சென்னை செல்லும், சலீம் அந்த விபத்தில் இறந்துவிட, சலீமின் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்னை போகிறான் கார்த்திக். தனது பெயரை மாற்றிக் கொண்டு சலீமாக மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். அங்கு அதன் பிறகு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை முழு நீளப் படத்தில் விரிவாக சொல்கிறது நான்.
படம் துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும் தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன், கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச் செல்கிறது திரைக்கதை.
ஆன்டனிக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. எப்போதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அவர் கார்த்திக் சலீம் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கின்றார். புகைப்படத்துக்காக நண்பனை விரட்டிச் செல்லும் போதும், எதிர்பாராதவிதமாக நண்பன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட, ஓ… என உரக்க அழும் காட்சிகளிலும் விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கின்றார்.
விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வருகிறார் சித்தார்த். இவருக்கு ஜோடியாக வருகிறார் ரூபா மஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மக்கஎல பாட்டுக்கு இவர் போடுகிற நடனம் இருக்கிறதே… அடேங்கப்பா… ரூபாவின் நடிப்பும் அவரது அழகும் கூடியிருக்கிறது.
அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில் வருகிறார்.
படத்திற்கு இசை விஜய் ஆன்டனி. தான் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதாலும், தனது 25வது படம் என்பதாலும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையை போட்டுத் தாக்கியிருக்கிறார். உலகினில் மிக உயரம்… செம டச்சிங்கான பாடல். மக்கஎல மக்கஎல பாடல் ஆட்டம் போட வைக்கிற ரகம். இனிமேல் பல பப்களில் இந்த பாடலுக்குதான் மவுசு. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை…’ பாடல் தத்துவ பாடல் போல் வருகிறது.
நான் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். முதல் காட்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றார் ஜீவா சங்கர். க்ளைமேக்ஸில் செம டச்சிங்கான சீனை வைத்து நம்மை அப்படியே மௌனமாக்கிவிடுகிறார்.