13.08.2012.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தோருமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தோருமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்களின் அச்_றுத்தல் நடவடிக்கைகளுக்கு படையினரும், பொலிஸாரும் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
அத்துடன், நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வன்முறையற்ற சுதந்திரமான ஒரு தேர்தலாக நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளரும் பொலிஸாரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இல்லத்தில் நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆட்கள் இருக்கின்றனர்.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தோல்வியை சந்திக்கவுள்ள இவர்கள், எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முதல்நாள் எமது தலைமை வேட்பாளர் துரைராஜசிங்கத்தின் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதிலிருந்து இதுவரைக்கும் 9 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எமது கட்சி வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபடும்போதே அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கான துண்டுப்பிரசுரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எமது கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாளர் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆட்கள் இருக்கின்றனர். இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக படையினரும் உள்ளனர்.
இவர்களின் இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு நாங்கள் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை சகிக்கமுடியாத இவர்கள் இதனைச் செய்கின்றனர் என்றார் அவர்.
இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா சீ.யோகேஸ்வரன் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
0 comments:
கருத்துரையிடுக