siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 செப்டம்பர், 2012

கொங்கோவில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்பு

20.09.2012.By.Rajah.ஆப்பிரிக்க நாடான கொங்கோவின் வனப் பகுதிகளில் புதிய வகை குரங்கினம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
'Cercopithecus Lomamiensis' என விஞ்ஞான ரீதியாகப் பெயரிடப்பட்ட இவ்வினம் கொங்கோ மக்களால் லெசுலா என அழைக்கப் படுகின்றது. கொங்கோவின் மத்தியில் உள்ள லொமாமி காடே இதன் தாயகமாகும். லெசுலா குரங்கினம் 28 வருடங்களுக்குள் கண்டு பிடிக்கப் பட்ட 2 ஆவது வகை குரங்கினம் ஆகும்.

விஞ்ஞானிகளுக்கும் வெளியுலகுக்கும் இந்த வகை குரங்கினம் புதிது என்ற போதும் கொங்கோ வேடர்களுக்கு இது நீண்ட காலம் பரிச்சயமான இனமாகும். இந்த லெசுலா குரங்கினம் வாழும் லொமாமி வனம் மிகப் பரந்ததும் அடர்த்தி மிக்கதும் ஆகும். கொங்கோவின் கிராமப் பகுதிகளில் இந்த வனம் அமைந்திருப்பதால் உயிரியலாளர்களால் மிகக் குறைந்தளவே ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இக் குரங்கினம் விஞ்ஞானிகளால் முதன் முறையாக கொங்கோவின் நகரம் ஒன்றில் வைத்து அதிர்ஷ்டவசமாகவே இனங்காணப் பட்டதாகக் கூறப் படுகின்றது. மேலும் இது புதிய வகைக் குரங்குதான் என உறுதிப் படுத்த 3 வருடங்கள் எடுத்துள்ளன.

லெசுலா மனிதர்களைப் போன்ற அகன்ற விழிகளை உடையது. இதன் முகம் இளஞ்சிவப்பு நிறமுடையதுடன் ஆந்தையைப் போன்று அமைந்துள்ளது மிகவும் அரிய வகை உயிரினமான லெசுலா கொங்கோ வேடர்களால் வேட்டையாடப்பட்டு அழிந்து வருவதைத் தடுப்பது தொடர்பாக தற்போது விஞ்ஞானிகள் கவலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது