siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

காலத்தை வென்று நிற்கும் கிராமியக்கலை காளியாட்டம்

06.08.2012.தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகளில் இதிகாச நிகழ்வுகளை உணர்த்தக்கூடிய கலைகள் ஏராளம் உண்டு. அவற்றில் முக்கியமானது காளியாட்டம். 21ஆம் நூற்றாண்டில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு காளியாட்டம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் அதைச் சார்ந்துள்ள கும்பகோணம், ஆடுதுறை, திருப்புவனம், திருமங்கலக்குடி, திருவிடைமருதூர், சாத்தனூர், அம்பாசமுத்திரம், தேப்பெருமாநல்லூர், திருப்பனந்தாள் முதலான ஊர்களிலும், திருச்சி மாவட்டத்தில் கீழ்ப்பழூர், கோடாலிக் கருப்பூர், ஸ்ரீபுரத்தான், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆகிய ஊர்களிலும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் கிராம கோவில் திருவிழாக்களில் காளியாட்டம் தவிர்க்கமுடியாத நிகழ்வாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய பிற மாவட்டங்களில் கிட்டத்தட்ட இது வழக்கொழிந்து போய்விட்ட நிலையில்தான் இருக்கிறது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் காளி வேடமிட்டு ஆடக்கூடிய சிவபாலனை சந்தித்து காளியாட்டம் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். காளியாட்டம் என்பது வழிபாடாகவோ அல்லது பொழுதுபோக்கினை அடிப்படையாகக் கொண்டோ தோன்றியிருக்கலாம் இதற்கு காளிவேடம், காளி திருநடனம், காளி வீதி உலா என பிற பெயர்களும் உண்டு" என்கிறார்.
கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் தவறாமல் இடம்பெறுவது மகாபாரதக் கதை. இதை வில்லுப்பாட்டு மூலமாகவோ கனியன்கூத்து மூலமாகவோ அந்தந்த ஊர் வழக்கப்படி செய்துவருவர். இந்தக் கதை நிகழ்த்தப்படும்போது அர்ஜூனன் மகனாகிய அரவானைக் காளிக்குப் பலி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கும். அந்தப் பலிகொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஆண் ஒருவர் காளி வேடமிட்டு ஆடிக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார். பார்ப்பதற்கு உண்மையான காளி தேவியைப் போன்றே காட்சியளிக்கும் அவர், தலையில் கிரீடம், கண்களில் வெள்ளியிலான கண்மலர், கழுத்தில் நீண்ட மாலை, கையில் உடுக்கை, கத்தி, சங்கு போன்றவற்றுடன் தலைவிரி கோலத்துடன் செந்நிற முகத்தில் வாய்க்கு வெளியே வெண்ணிறக் கோரைப் பற்கள்நீட்டிக் கொண்டிருக்க தொங்கிய நாக்கும், பெருத்த மார்போடும், சிவப்பு அல்லது பச்சைப் பட்டுச் சேலை உடுத்திய காளிதேவியாக வருவார். இக் காளி தேவியை ஒருவர் கயிற்றால் இடுப்பில் கட்டிப் பின்புறமாகப் பிடித்துவருவார். காளிக்கு முன்னர் கத்திச் சண்டையும் சிலம்பாட்டமும் நடைபெறும். இந்தக் காளியாட்டத்தில் பச்சைக் காளி, சிவப்புக் காளி என இரு பிரிவுகளும் உண்டு.
கிராமத்தில் பேய் பிடித்து ஆட்டும் பெண்கள் காளிதேவியாக வலம்வரும் இவரை வணங்குவர். அப் பெண்களைத் தன் கையில் வைத்திருக்கும் துடைப்பத்தால் அடிப்பாள் காளிதேவி. இவ்வாறு அடிக்கும்போது பெண்களுக்குப் பிடித்திருக்கும் பேய் விலகிவிடும் என்பது மரபு. ஆனால் இன்றைய கம்பியூட்டர் காலத்தில் அந்த நிலையெல்லாம் மாறிவிட்டது" என்கிறார் சிவபாலன்.
‘இன்று காளியாட்டம் என்பது ஒரு சடங்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு காலத்தில் காளியாட்டம் வேறுவிதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதாவது காளியாட்டம் நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் 25 அடி நீளத்திற்கு மிகப்பெரிய அரவான் உருவத்தை மண்ணால் படுத்திருப்பது போல் செய்வர். படுத்திருக்கும் அரவான் உருவத்திற்குப் பக்கத்தில் மிகப்பெரிய காளிதேவியின் உருவமும் செய்யப்படும். பொதுவாக கோயிலின் முன்பகுதியிலேயே இந்த உருவங்கள் செய்து வைக்கப்படும். கோவில் பூஜை தொடங்கும்போது காளிதேவியின் உருவத்திற்கு முன்பாக கோழி ஒன்றைப் பலி கொடுப்பர். பின்னர் அரவான் உருவத்தின் மேல் பூசணிக்காய் ஒன்றை வைத்து அதைத் துண்டாக வெட்டி எறிவர். கோவில் பூசாரி துரோபதையின் வேடமிட்டு அரவானைச் சுற்றிவந்து ஒப்பாரி வைத்து பாட்டுப்பாடி மார்பில் அடித்துக்கொண்டே அழுவார். இதுதான் பண்டைய தமிழ் கிராமத்துக் கோவில்களில் முக்கிய அங்கம் வகித்தது. அதன்பிறகு நாளடைவில் மெல்ல மெல்ல இந் நிகழ்ச்சி காளிவேடமிட்டு ஆடும் நிகழ்ச்சியாக மாறியிருக்க வேண்டும்’ என முந்தைய கால காளியாட்டத்தைப் பற்றிக்கூறும் சிவபாலன் பரத நாட்டியத்தை முறையாகக் கற்றவர்.

சினிமாவிற்குப் பாட்டெழுதி மீண்டும் ஒரு கண்ணதாசனாக மாறிவிட வேண்டும் என்பதுதான் சிவபாலனின் சின்னவயது ஆசை. அதற்காகவே கம்பனையும், வள்ளுவனையும், சித்தர்களின் பாடல்களையும் நூலகங்களில் தேடிப்போய்ப் படித்து தன் கவித்திறனை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் விதி வலியது. எல்லாமே தலைகீழாகிப்போனது. இன்று காளி வேடமிட்டு திருவிழாக்களில் ஆடிக் கொண்டிருக்கிறார். பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்ட சிவபாலன் காளியாட்டத்திற்கு எப்படிமாறினார்? அவரிடமே கேட்டோம்.

‘ஒருமுறை நண்பர் ஒருவரிடம் கடன் வாங்குவதற்காகச் சென்றிருந்தபோது, ‘என்னுடன் வா...சின்ன வேலை ஒன்று தருகிறேன்... அதற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்’ என்றார். அந்த நண்பரின் பெயர் ஜானகிராமன். அவரின் தொழில்தான் கோவில்களில் காளி வேடமிட்டு ஆடுவது. அவர் எமக்குக் கொடுத்த வேலை, எந்த ஊருக்கு அவர் காளிவேஷம் போடச் செல்கிறாரோ அவருடன் நானும் செல்லவேண்டும்.
காளி வேஷம் போடுவதற்குத் தேவையான பொருட்களை மூன்று பைகளில் சுமந்து சென்று வேஷம் போடும்போது அவருக்கு உதவியாக இருக்கவேண்டும்.

முதன் முறையாக இருபது கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள கிராமத்தில் இரவு நேரத்திருவிழாவிற்கு எம்மை அழைத்துச் சென்றார். மறைவான இடத்தில் வைத்து காளி வேஷத்தைப் போட ஆரம்பித்தார். அவர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொடுத்தேன். அந்த வேஷத்தைப் போட்டு முடிக்கவே மூன்றுமணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று. அன்றைய தினம் நடு இரவில் அவர் காளிவேஷமிட்டு ஊர்கோவிலில் ஆடியதைப் பார்த்த போது, நானே பயந்து போனேன். பணத்தேவையின் காரணமாக அவரோடு பல மாதங்கள் உதவிக்குச் சென்றேன். இதனால் அவர் எப்படி வேஷம் போடுகிறார், எப்படி ஆடுகிறார் என்பதை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒருநாள் அவருக்கு உடல்நலக் குறைவு. அன்றைய தினம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தின் கோவில் திருவிழாவுக்கு காளிவேஷமிட்டு ஆடுவதற்கு முன்பணம் வாங்கியிருந்தார். அவரால் இயலவில்லை. சிவபாலா... நான் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன்... போய் ஆடாவிட்டால் ஊர் மக்களை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்... என்ன செய்யலாம்? என்று என்னிடம் கேட்க, ‘நான் போய் ஆடிவிட்டு வரட்டுமா?‘ என்று பதிலுக்கு நான் சொல்ல, அவரும் துணிச்சலாகச் சம்மதித்தார். பரதம் கற்றிருந்த எனக்கு காளிவேஷமிட்டு ஆடும்போது பரத நாட்டியத்தின் நாட்டிய பாவனைகள் எளிதாகக் கைகொடுத்தன. அன்றைய தினம் எமது ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. நான்தான் காளிவேஷமிட்டு ஆடுகிறேன் என்பது தெரியாமலேயே நான் கடன் வாங்கியிருந்த பலரும் எனது ஆட்டத்தை ரசித்தனர். அவர்களோடு எமது தந்தையும் நின்றிருந்தார். இப்படித்தான் எனது கவிஞர் கனவு காளியாட்டமாக மாறிப்போனது" என்றபடியே காளிவேடம் போடுவது எப்படி என்பதை நம் முன்னே நிகழ்த்திக் காட்டினார்.

வேஷம் போடுவதற்கு முன்னர் காளியை நினைத்து அரைமணி நேரம் தியானம் செய்ய ஆரம்பித்தவர், அதன்பிறகு செந்தூரத்தால் ஆன பச்சை வண்ணத்தை உடலெங்கும் பூச ஆரம்பித்து, படிப்படியாக காளிதேவியாக மாறுவதற்கு மூன்றரை மணிநேரம் ஆயிற்று. உண்மையாகவே மேலுலகில் இருந்து பத்திரகாளியே நம் முன் காட்சி தந்ததைப் போல் அவதாரம் எடுத்திருந்த சிவபாலனுக்கு தேங்காய், பழம் படைத்து கற்பூர ஆரத்தி எடுக்கலாம் போலிருந்தது எமது மன நிலை.

இந்தக் காளிவேடம் தஞ்சை மாவட்டப் பகுதிகளில்தான் மிகவும் பிரசித்தம். மரத்தில் செய்யப்பட்ட ஆறு கைகள், அவற்றில் வாள், சூலாயுதம் ஏந்தியபடியே கோவில் திருவிழாக்களில் ஆடுவது மகத்தான விடயமும்கூட. பொதுவாக காளிவேடம் போடுபவர்கள் எந்தக் கோவிலுக்காக காளிவேடம் போடவேண்டுமோ, அந்தக் கோவிலுக்கு காப்பு கட்டிய நாள்முதல் விழா முடியும் வரை விரதம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். நம் தமிழகத்தைப் போன்றே கேரளாவிலும் காளிதேவி வேடமிட்டு ஆடும் விழா நடைபெறுகிறது. சென்னையில் சிவபாலன் மட்டுமே தற்போது காளி வேடமிட்டு ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக