07.09.2012.by.rajah. |
பஸ்ஸர ௭ல்பிட்டிய பகுதியில் கடந்த 18 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 18 வருடங்களாக தேடப்பட்டுவந்த இச்சந்தேக நபர் பொலன்னறுவை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி பஸ்ஸர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தகராறொன்றில் பஸ்ஸர நவஜனபதய பொல்கஹ கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆர்.டீ.பபாநிஸ் ௭ன்பவர் கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலதடைவைகள் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர் தலைமறைவாகவே இருந்துள்ளார். இவ்வாறான நிலையில் வழக்கை விசாரணைக்கு ௭டுத்து கொண்ட பதுளை மேல் நீதிமன்றம் சந்தேக நபரை குற்றவாளியாக கருதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 2011 செப்டெம்பர் 21 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்பினையடுத்தே நேற்று முன்தினம் இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்