siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம்

07.09.2012.by.rajah.கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இறுதியாக கூட்டத்தின் அனுமதி பெறவேண்டிய தீர்மானம் பிரதேச செயலரினால் வாசிக்கப்பட்டது. கோப்பாயில் ஜே/261 கிராம சேவையாளர் பிரிவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த சிறைச்சாலைக்கென ஒதுக்கப்பட்ட 333.09 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைப்பிரிவின் 51ஆவது படைத் தலைமையகம் அமைக்க வழங்குவது எனவும், நீர்வேலி ஜே/269 கிராம சேவையாளர் பிரிவில் பன்னாலை பகுதியிலுள்ள 36.37 பரப்பு அரச காணியை இலங்கை பாதுகாப்புப் படையினர் முகாம் அமைக்க வழங்குவது எனவும், தம்பாலை கதிரிப்பாய் ஜே/287 கிராம அலுவலர் பிரிவில் 179.43 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் தேவைக்கு வழங்க நில அளவை செய்யப்பட்டுள்ளது எனவும், நீர்வேலி ஜே/268 கிராம அலுவலர் பிரிவில் பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 2 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைக்கு வழங்குவது எனவும் பிரதேச செயலர் தீர்மானங்களைக் கூட்டத்தில் வாசித்தார். மேற்படி பகுதிகளில் உள்ள காணிகளையும் படையினருக்கு வழங்குவதற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பங்குபற்றிய ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் உட்பட எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தொண்டமானாற்றுப் பகுதியில் விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிகோரப்பட்ட போது திருமதி அமுதா சிறீஸ்கந்தராஜா என்பவர் குறித்த காணி தனியொருவருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆட்சேபம் தெரிவித்தார். இதனை விட மயிலிட்டி மக்களை, தொண்டமானாறு அக்கரைப் பிரதேசத்தில் குடியமர்த்துவதற்கும் படையினர் மேற்கொண்ட முயற்சிக்கும் இந்தப் பெண்மணி எதிர்ப்பு வெளியிட்டார். ஆயினும் முன்னர் குறிப்பிடப்பட்ட நான்கு காணிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமையினால் அவை கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்துக்கு அமைய படையினருக்கு வழங்கப்படும் என்று கோப்பாய்ப் பிரதேச செயலர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவருமான சில்வெஸ்திரி அலென்ரினிடம் படையினருக்கு காணிகளை வழங்க உடன்படுகிறார்களா எனக் கேட்டபோது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தான் இன்னமும் கையொப்பம் இடவில்லை என அவர் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் தெரிவித்தார்.