யாழ். கல்லுண்டாய் வெளியில் கழிவுப் பொருள்கள்
கொட்டப்பட்டு எரிக்கப் படுவதோடு மலக் கழிவுகளும் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு
நிலவுவதால் அப் பகுதியால் பயணிப்பவர்கள் குறிப்பாக அராலி மக்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தச் சீர்கேட்டை நீக்கி நகரப் பகுதி மக்களைப் போன்று
தாமும் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அராலி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர், யாழ். நகர முதல்வர், சங்கானைப் பிரதேச செயலர், வடமாகாண சுகாதார
அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மக்கள் சார்பில் மகஜர்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
யாழ். நகரில் இருந்து அராலி, வட்டுக்கோட்டைக்குச் செல்லும் வீதிக்கு இடையில்
காக்கதீவு, நாவாந்துறையிலிருந்து கல்லுண்டாய் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியில் பல
வருடங்களாக கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டும் எரியூட்டப்பட்டும் வருகிறது. இரவு
நேரத்தில் மலக்கழிவுகளும் இந்தப் பகுதியில் கொட்டப்படுகிறது.
நகரப் பகுதியில் சுகாதாரத்தினைப் பேணுவதற்காக
தமது கிராமப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டினை மேற்கொள்வதன் மூலமாக
தாம் சுகாதாரமாக வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றுள்ளது.
இது தொடர்பாக யாழ். மாநகர ஆணையாளர்
சே.பிரணவநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கழிவுப் பொருள்களை அந்த இடத்தில் வைத்து
முகாமைத்துவம் செய்து சுகாதார சீர்கேட்டைப் பேணுவதற்கான நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சு.
முரளிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது.
யாழ். மாநகர சபை போதிய நிலப்பகுதி
உத்தியோகபூர்வமாக அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அந்த நிலப் பகுதியை மாநகர
சபையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் தவிர மாகாண காணி
ஆணையாளரது அனுமதியும் தேவை, பிரதேச மட்ட அமைப்புகளது சம்மதமும் தேவை. இந்த மாதம்
நடைபெறவுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதுபற்றிய இறுதித் தீர்மானம்
எடுக்கப்படும் என்று முரளிதரன் தெரிவித்தார்
|
வெள்ளி, 7 செப்டம்பர், 2012
கல்லுண்டாய் வெளியில் பெரும் சுகாதாரச் சீர்கேடு; உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
இணைய செய்தி