siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

கிளி.கண்டாவளை பிரதேசத்தில் நிரந்தர படைமுகாம் அமைக்க திட்டமிடும் இராணுவம்

06.09.2012.BY.rajah.
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நிரந்தர படைமுகாம்களை அமைப்பதற்கென தனியார் நிலம் உட்பட, சுமார் 2ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமக்கு வழங்குமாறு படையினர் பிரதேச செயலகத்திடம் அனுமதி கோரியிருக்கும் விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மாவட்டத்தில் ஏற்கனவே கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 418ஏக்கர் நிலத்தை வழங்குமாறு படையினர் அனுமதிகோரியுள்ள நிலையில், தற்போது கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலும் சுமார் 2ஆயிரம் ஏக்கர் வரையான நிலத்தை தமக்கு வழங்குமாறு படையினர் அனுமதி கோரியுள்ளனர்.
இவ்வாறு படையினரால் அடையாளப்படுத்தப்பட்டு அனுமதி கோரப்பட்டுள்ள இடங்களில் ஏற்கனவே படையினர் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் அந்தப்பகுதியில் தமது முகாம்கள் நிரந்தரமாக விஸ்தரிப்பதற்காகவே இந்த அனுமதியை படைத்தரப்புக் கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பரந்தன், ஆனையிறவு போன்ற பகுதிகளிலேயே அதிகளவு நிலத்தை படையினர் அடையாளப்படுத்தியிருப்பதாகவும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் ஊரியான் நெற் களஞ்சியம், ஆனையிறவு உப்பள விடுதி ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலத்தையும் தமக்கு வழங்குமாறு படையினர் குறித்த அனுமதியில் கேட்டிருக்கின்றனர்.
இதேவேளை மாவட்டத்தில் அதிகளவு நிலப்பரப்பைக் கொண்ட கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் படையினர் அனுமதிகோரியிருக்கும் நிலப்பகுதிகளில் பெரும்பாலானவை தனியாருக்குச் சொந்தமானவை என்பதுடன் இந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள் தற்போது வேறிடங்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது