siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

தமிழரின் அக வாழ்விலும் புற வாழ்விலும் பனை

06.09.2012.BY.rajah.
மனித வாழ்க்கை இயற்கையோடு நெருக்கமாக இணைந்துள்ளது. மரமும் மலையும் மனிதனின் மனதிலே நிறைந்திருந்தன. ஆறும் கடலும் அவனது பார்வையிலே நிலைத்திருந்தன. மண்ணும் விண்ணும் எண்ணத்திலே இணைந்திருந்தன. மனிதன் வாழ்க்கை நடைமுறைகள் இயற்கையின் தோற்றங்களோடு தொடர்புற்று விளங்குகின்றன. தமிழர் வாழ்க்கையில் இப்பண்பினைச் சிறப்பாகக் காண முடிகின்றது. அதனைப் பல தமிழ்ப் பாடல்களும் சான்றுபகிர்கின்றன. குறிப்பாக இந்த ஆய்வுக் கட்டுரையில் தமிழர் வாழ்வியலோடு பனைமரம் இணைந்துள்ளமை விளக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பனையின் வளம்பெற்ற பூமியாகும். வரண்ட நிலமெனினும் வளமான பனைமரங்கள் வளர்ந்த நிலமாகும். அதனால் மக்களது வாழ்வியலோடு பனைமரம் நெருங்கி இணைந்துள்ளது. பனை மக்களது பண்பாட்டிலே நிலைத்துள்ளது. பனை தந்த வளங்கள் வாழ்வோடு அது இணைய உதவின. உணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர். அந்த இணைப்பு நிலை இலக்கியங்களிலே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காட்டப்பட்டுள்ளது. உருவிலும் உணர்விலுமாக பனை தமிழர் வாழ்வில் எவ்வாறு இணைந்திருந்தது என்பதை இன்று எம்மவர் அறிய வேண்டியதும் அவசியமே. கால மாற்றத்தினால் வாழ்வு நிலைமாறி திசைகெட்டு நாம் செல்லும் வழி இருட்டாகி நிற்கிறோம். இருட்டிலே தோன்றும் நெடும் பனைகளே எமக்கு விளக்காக, வாழ்வு நடக்க வேண்டியுள்ளது. பனையின் துணையோடு வாழ்ந்த முன்னோர் செய்திகளைத் தேடி அறிந்து துணைக்கொள்ள வேண்டும். அதற்கென ஆய்வுகள் பல செய்ய வேண்டும்.
சங்க இலக்கியங்களிலே பனை பற்றிய செய்திகளை நாம் நிறையக் காணலாம். அக வாழ்விலும் புறவாழ்விலும் அது நெருங்கியுள்ளதை அறியலாம். இயற்கையிலே இருண்ட நிறம் கொண்ட பனை மக்கள் மனதிலே நிறைந்திருக்கின்றது. வரண்ட வாழ்க்கைப் பாதையை வளமாக்கியுள்ளது. காதலும் வீரமும் காண உதவியுள்ளது. புலவர்களின் மொழிவளத்திலே சிறப்புப் பெற்றுள்ளது. பனையின் தோற்றமும் பண்பாடும் பரவலாகவே தமிழ் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அகவாழ்வு நிலையில்
மனிதனின் உள்ளம் சம்பந்தமான வாழ்க்கை நிலையைப் புலவர்கள் அகவாழ்வு என்று கண்டனர். ஆணும் பெண்ணுமாக இணைந்த கூட்டுவாழ்க்கையிலே அவர்களது உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பினாலே அறிதல் கூடும். குறிப்பு நிலையினை விளக்கப்பனைதான் பயன்பட்டுள்ளது. நற்றிணையிலே ஒரு பாடல் புலவர் வெள்ளிவீதியார் பாடியது. தான் விரும்பும் காதலனைப் பிரிந்த பெண்ணின் அகநிலைக் கூற்றாக அமைந்த பாடல் அது. காதலன் பிரிவினால் தான் அடையும் துன்பம் கூறும் பெண்ணின் குரல். கடற்கரையிலே வாழ்பவள். சூழலில் இருக்கும் மரங்களைப் பார்க்கிறாள். மண்ணுக்கும் விண்ணுக்குமாக அவள் பார்வை தாவுகிறது. திங்கள் வானிலே தோன்றிவிட்டது. கடல் அலைகள் ஓலமிடுகின்றன. தாழை மலர்ந்து நிற்கிறது. கண்ணிலே படும் காட்சிகள் யாவும் மனத்துயரை மாற்றுவதாக இல்லை. பார்வையினை மீண்டும் மேலே செலுத்துகின்றாள். அருகே உயர்ந்து நிற்கும் கரிய பெரிய பனை மரத்தில் ஒரு சோககீதம். உள்ளத்தை நெருடும் குரல். துணையிழந்த அன்றிற் பறவை துணைதேடி குரல் கொடுக்கிறது. கண்டவள் மனதிலே சற்று மாறுபாடு. ஒரு கணம் தன்துயர் மறந்து அந்தப் பனையிலே இருக்கும் அன்றிலையே பார்க்கிறாள். துன்பம் எனக்கு மட்டுமில்லை. இந்தப் பறவைக்கும் கூட இருக்கிறதே என்று எண்ணியவள் தன் துயரை மறந்து விட்டாள். நெடும்பனையில் நின்று வாடும் அன்றிலின் குரலுக்கே காது கொடுத்துவிட்டாள். பிரிவின் ஒற்றுமை நிலை. பேச்சுக்கிடமில்லை. தோற்றம் தான் உணர வைக்கின்றது. மையிரும்பனையே மனதில் நிறைந்துவிட்டது. புலவர் நாவிலே பாடலாகியது. சொற்களால் அணி சூழப் பனைமரம் நிற்கிறது.
திங்களும் திகழ்வான் ஏர்தரும் இளநீர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே
ஒலிசிறந்து ஓதமும் பெயரும் மலிபுனல்
பல்பூங் கானல் முள்ளிலைத் தாழை
சோறு சொரி குடவயின் கூம்புகை அவிழ
வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு
மையிரம் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும் (நற்றிணை: 335)
பழந்தமிழ்ப் பாடலிலே பனை மனவுணர்வைக் காட்டிநிற்கிறது. பனை நிறைந்த கடற்கரை நிலம் காதல் வாழ்வைப் படம் பிடித்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தியாகி அவன் வரவுக்கென்றே வாழும் பண்பாடு. பனை மரம்போல வளர்ந்த பண்பாடு. அது தமிழர் வாழ்விலே நிலைத்து விட்ட பண்பாடு.
ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு விருப்பம் கொண்டாலும் கற்புநிலையிலே இணைந்து வாழ்ந்தனர். இருவர் விருப்பினையும் தோழி பெற்றோரிடம் கூறி இணையத் துணையாய் நிற்பாள். பனைமரம் படர்ந்த நிலத்தோர் பண்பாடு அதுவாக இருந்துள்ளது. குறுந்தொகையிலே வரும் பாடலொன்று அதனை விரிவாகவே விளக்குகிறது. உலோச்சனார் என்ற புலவர் புலமையின் துணையால் பண்பாடு பேசுகிறார். பனைமரங்கள் நிறைந்த மணற்பாங்கான நிலத்தில் வாழ்பவள். ஒருவனை விரும்பிவிட்டாள், மணம் செய்ய அவன் வருவான் என எண்ணிக் காத்திருக்கின்றாள். காலம் கடக்கிறது. சூழகோலமும் மாறிவிட்டது. அவன் இன்னமும் வரவில்லை. அவளது துயர்கண்ட அருமைத் தோழி தேறுதல் கூறுகிறாள். உண்மை நிலையை அறியாது தோற்றத்தைக் கண்டு துயரப்படும் தலைவியை நோக்கி அவள் கூறும் வார்த்தைகள் இயற்கையின் நிலைக்காட்டி இன்னல் தீர்க்கும் அவள் மதிநுட்பம்; பனையில் தோற்றம், துயரம் களையத் துணையாகிறது. "கடற்கரையிலே காற்றுக் காலத்திலே பனைமரங்கள் மணலால் அடிபுதைய மறைந்து நிற்கின்றன. அடம்பன் கொடி படர்ந்த மணல் குவிவதாலே நெடிய பனைகளெல்லாம் குறிய பனைகளாகத் தோற்றுகின்றன. உண்மையிலேயே அப்பனைகள் குறியன அல்லவே. காலம் மாற மீண்டும் மணல் கரைய நீண்டு தோன்றும். அதுபோல உன் காதலனும் உரிய காலத்திலே வந்துவிடுவான். வருந்தாதே'' தோழியின் சொற்களின் உண்மை காதலியின் உணர்விலே சேருகிறது. மனத்துயரும் தீருகிறது. பனையின் தோற்றம் காதலன் நிலையைக் காட்டுகிறது.புலவர்,
தோழி கானல்
ஆடரை புதைய கோடையிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக்
குறிய வாகுந்துறைவன்... (குறுந்தொகை: 247)
என்ற அடிகளால் விளக்கும் வாழ்வியல் எவ்வளவு உண்மையானது. இயற்கையோடு நாம் இணைந்து வாழ்வதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வாழுகின்ற சூழலோடு மன உணர்வுகளைச் சிறப்பாக அகவுணர்வுகளைச் சேர்த்து நோக்கும் தன்மை போற்றுதற்குரியது. மணலால் புதைய நிற்கும் நெடும் பனைகள் மனம் துயரிலே புதையாமல் வாழ வைக்கின்றன. நேரில் காணும் தோற்றங்கள் நெஞ்சிலே படியும் துயர அலைகளை மடியச் செய்கின்றன. பனை என்றுமே நெடும் பனைதான். காற்றினாலே மணல் சேர்ந்து அதன் தோற்றம் குறியதாதல் வெறும் தோற்றமே. சங்கப்பாடலில் காணும் இப்பனையின் கோலம் யாழ்ப்பாணத்திலும் நாம் காணும் கோலமே.
மக்கள் இளமை நிலையில் களவின்பம் நாடுவர். அது இயற்கை நிலை. ஆனால் பண்பாடு பெற்ற உள்ளங்கள் விரச வாழ்வை விரும்புவதில்லை. பறவைகள் சில ஒழுக்க நிலையிலே பகலிலே சேராமல் வாழுகின்றன. மனிதனும் அவற்றிடம் கற்கவேண்டிய பண்பாடு இது. காமத்தால் மயங்கி ஒழுக்கம் தவறாமல் வாழப் பனையும் பயன்பட்டுள்ளது. இளைஞன் ஒருவன் எந்நாளும் பகற்போதினிலே வந்து அழகிய பெண்ணொருத்தியுடனே நீண்ட போது அளவளாவுகின்றான். அவன் செயலால் ஊரிலே அலர் பரவிட்டது. முறையாகத் திருமணம் செய்துவிட்டால் அலருக்கிடமில்லை. பண்பு கெடாது. மணம் செய்ய எண்ணாமல் தினமும் பகலில் வருபவன் தவறை உணரவேண்டும். அந்தத் தலைவனைத் தோழி வழிப்படுத்த எண்ணுகின்றாள். அவன் வாழுமிடத்துப் பனைகளின் தோற்றத்தையே துணைகொண்டு செயற் படுகிறாள். தலைவனை அழைத்துக் கூறுகின்றாள். கடற்கரை நிலத்திலே வாழ்பவனே! இயற்கையின் தோற்றத்தை ஒரு முறை பார். எமது முற்றத்திலே நிற்கும் பனைமரத்திலே இரவிலேதான் நாரைகளும் அன்றிலும் வந்து தங்குகின்றன. அதுவே பண்பாடாயமையும். நீயும் இரவிலே வருவதே இயற்கை நிலையாகும். ""தோழியின் சொற்களில் வாழ்வு நிலையை அவன் உணருகின்றான். பறவைகள் இரவிலே கூட வாழ்கின்றன. அதற்காகவே பனை மரத்திலே வந்து தங்குகின்றன. பகலிலே உணவு தேடிப் பறந்து திரிகின்றன. இரவிலே துணையோடு இன்பம் காணப் பனையிலே வந்து தங்குகின்றன. முற்றத்தில் நிற்கும் பனையிலே நடக்கும் இனிய குடும்ப வாழ்வு என் காதலியின் உள்ளத்திலும் எண்ணமாயிருக்கும். பறவைகளைக் கண்டு அவள் மனம் என்னையும் ஒரு சேர எண்ணி ஏங்கும். இனிமேல் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதி கொள்கிறான். பனையில் இரவில் வாழும் அன்றில்கள் போல நாமும் இல்லத்திலே கூடி வாழ வேண்டும் என நினைத்து செயற்படுகின்றான். அன்று அகநானூறு 360 ஆம் பாடலில் இப்பனைக் குடும்ப வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. பனை நிற்கும் சூழல் வாழ்வு நிலைகள் அதனுடன் இயற்கையாகவே இணைத்து நோக்கப்பட்டுள்ளன. ஒருதலைக் காதல் நிலையிலும் கூடப்பனை தமிழர் வாழ்விலே தொடர்புற்றிருந்துள்ளது. தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காகப் பனையின் துணையை நாடும் ஆடவர் பலரும் அன்று வாழ்ந்துள்ளனர். அவர் நிலைகள் பாடலிலே குறிப்பிடப் பட்டுள்ளன. தன் எண்ணத்திலே நிறைந்தவள் உருவத்தை எழுதி, பனங்கருக்கிலே செய்யப்பட்ட குதிரையிலே ஏறி வீதிவலம் வரும் ஆண்கள் பலர். அவர்கள் செயல் "மடலேறல்' என அழைக்கப்பட்டது. குறுந்தொகையில் வரும் பாடலொன்று இதனை விளக்குகின்றது.
பொன்னோர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்த திதுவென முன்னின்
றவள்பழி நுவலு மிவ்வூர்
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமாறுளெனே.
(குறுந்தொகை : 173)
தான் விரும்பிய பெண்ணைப் பெறுவதற்கு உதவும்படி அப் பெண்ணின் தோழியை வேண்டுகின்றான் ஒரு ஆடவன். தோழியோ அதற்கு உடன்படவில்லை. எனவே அவன் மடலேறி தனது எண்ணத்தை எல்லோருக்கும் வெளிப்படுத்த முடிவுசெய்கின்றான். பனை மடலிலே செய்த குதிரையை பொன்னையொத்த நிறமுடைய ஆவிரையினுடைய புதிய பூக்களால் அலங்கரித்து, மணிகளைக் குதிரையின் கழுத்திலே கட்டி, அவை ஒலி செய்ய ஏறிவரும் அவன் செயல் ஊரவர்க்கு உண்மையை உணர்த்தும். குதிரையிலே எழுதித் தொங்கவிடப்பட்ட பெண்ணின் உருவம் யாருக்காக அவன் மடலேறினான் என்பதை விளக்கும். மடலேறிவருதலுக்காக அவன் நாணப்படவில்லை. பெண்ணின் மேல் ஊர்பழி கூறவே வழிசெய்கின்றான். இங்கு காமத்தின் நாணமற்ற தன்மையை வெளிப்படுத்தப் பனைமரம் பயன்படுத்தப்படுகிறது. கலித்தொகையிலும்,
மணிபீலி சூட்டிய நூலொரு மற்றை
அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்துயாத்து
மல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இஃதொத்தன்
எல்லீருங் கேட்டீமின் என்று
படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை
நல்கியாள் நல்கியவை. (கலி : 138)
என வருகின்ற அடிகளும் மடலேறும் பற்றிக் குறிப்பிடுகின்றன.
பனங்கருக்கினாலே செய்த குதிரையை அழகு செய்யப் பலவித மலர்கள் பயன்பட்டன. நீல மணி போலும் நிறத்தையுடைய பீலியையும், பூளைப்பூவையும், ஆவிரம் பூவையும் எருக்கம் பூவோடு தொடுத்துக் காட்டிய மாலைகளால் மடல்மா அலங்கரிக்கப்பட்டது. உயிரற்ற குதிரையாக பனங்கருக்கு உருவெடுத்து காதல் வயப்பட்டவனைத் தாங்கிச் செல்கிறது. இது அவனது இறுதி முயற்சியாக அமைந்ததெனலாம். தன் எண்ணத்தை எல்லோரும் அறியச் செய்து பெண்ணைக் கொள்ளும் பெரு முயற்சி தமிழர் அகவாழ்வில் தனித்துவமான பண்பும் எனலாம்.
புறவாழ்வு நிலையில்
மனிதனின் வீட்டு வாழ்க்கை அகவாழ்வாக வெளிவாழ்க்கை புறவாழ்வாக அமைந்தது. போரும் அது சம்பந்தமான நிகழ்வுகளும் புறவொழுக்கம் எனப் புலவர்களால் விளக்கப்பட்டுள்ளன. போர்க்களத்திலே உள்ள யானைகளின் துதிக்கைகள் பனை மரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளன.
பனைமருள் தடக்கை எனப் புறநானூற்றுப் பாடலொன்று யானையின் பெருங்கையை வர்ணிக்கின்றது. பனையின் உயரமும், கருமை நிறமும் வலிமை படைத்த யானையின் துதிக்கையுடன் பொருந்தி நிற்கின்றன. அகநானூற்றுப் பாடலொன்றும் யானையின் துதிக்கையினை 'திரள்பனையன்ன பரு ஓர் எறுழ்தடக்கை' என வர்ணித்துள்ளது. பனையின் வலிமையான தோற்றம் புலவன் கண்ணில் நிறைந்து யானைக்கு உவமையாகிற்று. வலிமை நிலையிலே பனை மரமும் யானையின் துதிக்கையும் ஒன்றுபட்டு வீரம் விளக்குகின்றன.
தொடரும்