siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 செப்டம்பர், 2012

கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைவதற்கு ஐதேக நிபந்தனை

 
 
17.09.2012.By.Rajah.கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
காலத்தைக் கடத்தாமல் அரசாங்கம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிக்கவேண்டும் என்று அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை மற்றும் அவற்றுக்கான காலஎல்லை தொடர்பில் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டார்.
நாட்டின் இனப்பிரச்சனை தீர்வுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பிலும் அதன் நிகழ்ச்சிநிரல் மற்றும் அவற்றுக்கான காலஎல்லை தொடர்பிலும் அரசாங்கம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மூன்று சமூகங்களுக்கும் முதலமைச்சர் பதவி
கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு தமிழர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முஸ்லிம் ஒருவருக்கும் ஒராண்டுக்கு சிங்களவர் ஒருவருக்கும் வழங்கவேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களையே கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அரச கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதாக ஆளுநருக்கு தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துவிட்டது.
இதற்கிடையில் அரச கூட்டணியும் கிழக்கில் தமது ஆட்சியே அமையும் என்று பின்னர் அறிவித்தது.
ஆனாலும் ஒருவாரத்துக்கும் கூடுதலாக அரசுடன் பேச்சு நடத்திவருவதாக கூறிவருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் உறுதியான முடிவு எதனையும் அறிவித்தபாடில்லை.
இந்த நிலையில் தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி ஜனாதிபதி அழைத்தால் அதுபற்றி பேசிப்பார்க்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் நேற்று முன்நாள் பதிலளித்திருந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது