siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 செப்டம்பர், 2012

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட்

தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களில் குறைந்த மட்ட குழுவினர் வாராந்தம் சராசரியாக எந்தவிதமான சாக்லேட்டும் சாப்பிடுவதில்லை. ஆனால் உயர் குழுவில் உள்ளவர்கள் வாரம் 63 கிராம் சாக்லேட் சாப்பிடுபவர்கள்.
இறுதியாக இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்களில் அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்கள், சாக்லேட் சாப்பிடாதவர்களை விட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 17 வீதம் குறைவாகும்.
நரம்பியல் குறித்த சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாக்லேட்டில் காணப்படுகின்ற ஃபிளவொனொயிட்ஸ் என்னும் பதார்த்தமே இதற்கு காரணம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவ்ரான, சுவீடனின் கரோலின்ஸ்கா கற்கைகள் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சுசானா லார்சன் கூறியுள்ளார்.
இதயம் சம்பந்தமான நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக இந்த ஃபிளவொனொயிட்ஸ் செயற்படுகிறது.
இரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இந்த ஃபிளவொனொயிட்ஸ் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.
டார்க் சாக்லேட்தான் இதய நோய்களுக்கு உகந்தது என்று கடந்த காலங்களில் கூறப்பட போதிலும், பால் சாக்லேட்டுகள்தான் சிறந்தது என்று இந்த ஆய்வு தற்போது கூறுகிறது.
ஏனைய வகை சாக்லேட்டுக்களை ஓரளவு உண்பதும் நல்ல பயனைத் தரும் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.
ஆனால், இந்த விடயம் குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும் அதேநேரத்தில், இந்த ஆய்வு முடிவையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டால் அது உடலுக்கு நஞ்சாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அத்துடன் சாக்லேட்டில் அதிகமாக சீனியும் கொழுப்பும் சேர்க்கப்படுவதும் உகந்ததல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு