siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 29 ஆகஸ்ட், 2012

2020 இல் காசா பகுதி வாழ தகுதியற்ற பிரதேசம்


29.08.2012.BY.rajah.உடன் நடவடிக்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

பலஸ்தீனின் காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
“காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது” என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் மக்ஸ்வெல் கெய்லாட் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது குறித்த ஐ.நா. அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காசாவின் தற்போதைய சனத்தொகை 1.6 மில்லியனாக உள்ளது. அது 2020 ஆம் ஆண்டாகும்போது 2.1 மில்லியனாக அதிகரிக்கும். இந்த சனத்தொகை அதிகரிப்பால் அங்கு ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 5,800 பேருக்கு மேல் வசிப்பார்கள் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் காசாவின் நிர்வாகக் கட்டமைப்பு சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை. குறிப்பாக மின் விநியோகம், நீர் விநியோகம், சுகாதாரம், நகர அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் வளர்ச்சியடையவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காசாவின் கால் பங்கு கழிவு நீரே, மீள் பயன்பாட்டுக்கு பெறப்படுகிறது. எஞ்சிய நீர் மத்திய தரைக் கடலுடன் கலக்கிறது. காசா கடற் பகுதியை இஸ்ரேல் முழுமையாக முடக்கியுள்ளதால் அங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதோடு அதன் காரணமாக தொடர்ச்சியான மின் தடைக்கும் உள்ளாகி வருகிறது. அதேபோன்று காசாவில் வேலையில்லா தோர் எண்ணிக்கை 45 வீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் காசாவின் குடிநீர் தேவை 60 வீதமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள ஐ.நா. பிரதான நீர் ஆதாரங்களான நீர்த் தேக்கங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் அங்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். உடன் சரி செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2020 ஆம் ஆண்டாகும் போது காசா பகுதிக்கு மேலும் 440 க்கு மேற்பட்ட பாடசாலைகள், 800 மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மேலும் 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகை
கடந்த 2006 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் போராளிகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான விநியோகப்பாதைகளை இஸ்ரேல் முடக்க ஆரம்பித்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட வீரரே கடந்த ஆண்டு ஒக்டோபரில் கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் 1,027 பலஸ்தீன கைதிகளுக்கு பதில் விடுவிக்கப்பட்டார்.
எனினும் 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேல் அந்த பகுதிக்கான முழு விநியோகப் பாதைகளையும் முடக் கியது.
இதனால் குறுகிய கடற்கரை பகுதியான காசாவில் ஐ.நா. உதவி, வெளிநாட்டு நிதியுதவி மற்றும் சுரங்கப்பாதை ஊடாகவே அங்குள்ள வர்களுக்கு உணவு, கட்டுமானப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், கார்கள் என்பன எகிப்தினூடாக கிடைக்கப் பெறுகின்றன.
காசாவில் 80 வீதமானோர் உதவிகளிலேயே தங்கியிருப்பதால் அப்பகுதிக்கான சர்வதேச உதவிகளை அதிகரிக்குமாறு ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் கெய்லாட் கோரியுள்ளார். “அவர்கள் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளார்கள்.
அவர்களுக்கு அரசியல் மற்றும் சாதாரண விடயங்களிலும் எமது உதவி தேவைப்படுகிறது” என்றார். எனினும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்த வண்ணமே உள்ளது.
காசாவில் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வான ஹமாஸ் அமைப்பை மேற்கு நாடுகள் தீவிரவாத அமைப்பாகவே கருதுகிறது