30.08.2012.BYrajah. |
யாழ்.நகரின் சுகாதார நடவடிக்கைகள் முன்னர்
ஒருபோதும் இல்லாதவாறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்திச் சீரமைக்கப்படவுள்ளது
என்று யாழ்.மாநகர சபை சுகாதாரக் குழுவின் தலைவர் எஸ்.விஜயகாந்த் நேற்றுப்
புதன்கிழமை யாழ்.மாநகர சபையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது
குறிப்பிட்டார்.
சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஒரு கட்டமாக
எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை முதல் குப்பைகளை அகற்றும் பணி தினமும்
காலையிலும் பிற்பகல் 2 மணியில் இருந்தும் இரு தடவைகள் இடம்பெறும். நகரின் மையப்
பகுதியில் மூன்று கட்டமாக இடம்பெறும்.
குப்பை எடுப்பதற்கென முன்னர் எட்டு டிராக்டர்கள்
இருந்தன. இப்போது இருபத்தி ஐந்துவரை உள்ளன. குப்பை எடுக்கவரும் வாகனங்கள் சமிக்ஞை
ஒலிகள் எழுப்பிவரும். பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை வைக்காமல் வாகனங்கள்
வரும்போது கொடுக்க முடியும். காலையும் மாலையும் என இரண்டு தடவைகள் ஓடு வீதிக்கு
குப்பை அகற்றும் வாகனங்கள் வரும்.
பொதுமக்கள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கி
வீதிச் சுத்தத்துக்கு உதவ வேண்டும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மட்டும் ஆயிரத்து 386
மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
தைமாதம் தொடக்கம் ஆறுமாதம் வரை 8,604 மெற்றிக்
தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது எனவும் ஆடி மாதம் வரை மலக்கழிவு ஏழு
லட்சத்து 33 ஆயிரத்து 200 லீற்றர் வரை அகற்றப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற பெக்கோ இயந்திரம்
தேவைப்படுகிறது. ஒரு இயந்திரம் ஒரு கோடி 50 லட்சம் ரூபாவரையானது. அப்படி ஒரு
இயந்திரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி மாநகர சபையிடம் தற்சமயம் இல்லை.
அதுதொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் என
நம்புகின்றோம் என்று அவர் மேலும் கூறினார்
|
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
யாழ்.நகரில் சுகாதார நடவடிக்கை புதிய திட்டங்களால் சீரமைப்பு; மாநகர சுகாதாரக் குழுத் தலைவர் தகவல்
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
செய்திகள்