siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தண்ணீர் கூட அருந்தாமல் போராடும் ஈழத்தமிழர் செந்தூரனுக்கு தொடரும் அநீதி!- தமிழக அரசு மௌனம்

 
 வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் நேற்றோடு 18 வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ தமிழக அரசு விரும்பவில்லை.
அவரையும் அவரோடு இருக்கும் அனைத்து முகாம் வாசிகளையும் அரசு விடுதலை செய்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்பதே செந்தூரனின் கோரிக்கை.
நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அரசு விரும்பவில்லை.
இதுதொடர்பாக கியூ பிரிவு கண்காணிப்பாளர் (எஸ் பி) சம்பத் குமார் அவர்களை சந்திக்க, சிறப்பு முகாம் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் அவரது அலுவலகம் சென்றனர்.
இக்குழு கூறியதாவது,
எங்களை வரச் சொல்லிவிட்டு , இரண்டுமணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். பின்பு இறுதி வரை சம்பத் குமார் எங்களை சந்திக்க வரவே இல்லை. அதனால் நாங்கள் கடிதம் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
நாங்கள் வெளியே வந்ததும் எஸ் பி எங்களிடம் தொலைபேசியில் பேசினார். செந்தூரனை போராட்டம் நடத்துவதை கைவிடச் சொல்லுங்கள். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டேன் என்கிறார் என்று கூறினார். ஆனால் செந்தூரனின் போராட்டத்திற்கு எந்த பதிலும் கூற அவர் தயாராக இல்லை.
இவ்வாறு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறினர்.
இன்று செந்தூரனை சந்தித்து பேசிய தாசில்தார் வளர்மதி மற்றும் துணை மாவட்ட ஆட்சியாளர் செந்தூரனின் கோரிக்கையை நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு சென்றனர்.
அப்போது அரசின் காதுகளுக்கு இதுவரை இதுபற்றி தெரியவே தெரியாது போலும்.
இதற்கிடையில் இன்னொரு துயர சம்பவம் நடந்துள்ளது.
செந்தூரனை சந்திக்க இலங்கையில் இருந்து அவர் அத்தை வந்துள்ளார். செந்தூரனின் நிலையை கண்டு மனம் உடைந்துள்ளர். அவர் தங்கியுள்ள விடுதி மேலாளர்களை கியூ பிரிவு காவல் துறை மிரட்டி உள்ளனர். செந்தூரனின் சித்தப்பாவையும் மிரட்டி உள்ளனர்.
எல்லா நிகழ்வுகளையும் கவனித்த செந்தூரனின் அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் அத்தை நேற்று இறந்தே போனார்.
அத்தையின் இறந்த உடலை பார்ப்பதற்கு இப்போது செந்தூரன் காவல்துறையிடம் அனுமதி வேண்டி உள்ளார்.
ஒருவருக்கு இத்தனை சோகம் வரக் கூடாது. எவ்வகையிலும் ஆதரவற்ற இது போன்ற ஈழ ஏதிலிகளை சித்திரவதை செய்து இன்பம் காணுகிறது தமிழக அரசு மற்றும் காவல்துறை.
எளியோரை மென்மேலும் துன்பப்படுத்தி பார்ப்பது தான் அரசு இயந்திரந்தின் செயலாக இப்போது மாறிவிட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.