குடும்பப் பாங்காக நடிக்க விரும்பிய என் அக்கா ஸ்மிதாவை சொத்துக்காக சில்க் ஸ்மிதா என்ற கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அவர் இறந்தது தற்கொலை அல்ல, சாவில் மர்மம் இருக்கிறது,” என்று மீண்டும் புகார் கூறியுள்ளார் ஸ்மிதாவின் ஒரே தம்பி நாகவர பிரசாத்.
1996-ம் அண்டு சில்க் ஸ்மிதா உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டத்துக்காக வந்தபோது, ஆந்திராவிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்திருந்தனர் நாகவர பிரசாத்தும் அவர்கள் தாயாரும்.
மருத்துவமனை வளாகத்திலேயே, ‘ஸ்மிதாவை கொலை செய்துவிட்டனர், சொத்துக்காக கொன்னுட்டாங்க. அதை விசாரிங்க’, என்று கதறியழுதனர்.
ஆனால் போலீசார் எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த சாவில் இயற்கையாவே ஒரு டஜன் சந்தேகக் கேள்விகளை அன்றைக்கு டிவி – பத்திரிகைகள் எழுப்பியும், போலீசார் பிடிவாதமாக அதை தற்கொலை என்று கூறி கோப்பை மூடிவிட்டனர். சில்க்கின் கூடவே இருந்தவர் என்று கூறப்பட்ட ‘தாடிக்காரர்’ என்ற நபரையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
15 ஆண்டுகள் கழித்து சில்க்கின் சாவை மீண்டும் நினைவூட்டியுள்ளது, அவரது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் இந்திப் படம்.
தன் அக்கா சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார் நாகவர பிரசாத். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கும் தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடியாகி, இப்போது படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகிவிட்டது.
இந்த நிலையில், மீண்டும் சில்க் ஸ்மிதா சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளார் நாகவர பிரசாத்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “நானும், சில்க் ஸ்மிதாவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தோம். அப்பா எங்கோ ஓடிப்போய்விட்டார். சாப்பாட்டுக்கே கஷ்டம். சில்க் ஸ்மிதாவுக்கு 17 வயது இருக்கும்போது அன்னபூர்னம் என்ற பெண் சென்னைக்கு அழைத்து போய் சினிமாவில் நடிக்க வைத்தார்.
சில்க் ஸ்மிதாவுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தது, கணவன் ஓடிவிட்டான் என்றெல்லாம் அப்போது வதந்திகள் வந்தன. அவை எதுவும் உண்மை கிடையாது. சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தபோது திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த ஒரு தாடிக்காரன் திடீரென வந்து ஒட்டிக்கொண்டார். கால்ஷீட் உள்ளிட்ட சினிமா சம்பந்தமான எல்லா வேலைகளையும் அந்த நபர்தான் கவனித்தார். அந்த நபரை சில்க் ஸ்மிதா ரொம்ப நம்பினார்.
ஒருநாள் வீடு ஒன்றை விலை பேசினார். அந்த வீட்டை தனது பெயரில் வாங்க அக்காள் விரும்பினார். ஆனால் கூட இருந்த நபர் தனது பெயரில் வாங்கும்படி நிர்ப்பந்தித்தார். இதனால் இருவருக்கும் தகராறு மூண்டது. சாவதற்கு சில நாட்களுக்கு முன் எனது தாய் சென்னை சென்று சில்க் ஸ்மிதாவுடன் தங்கிவிட்டு வந்தார். அவர் வந்த மூன்றாவது நாள் சில்க் ஸ்மிதா மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.
நாங்கள் அலறியடித்து ஓடினோம். எங்களிடம் என் வாழ்க்கையில் நிறையபேர் விளையாடிவிட்டனர். வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று சில்க் ஸ்மிதா எழுதியது போன்ற ஒரு கடிதம் கொடுத்தனர். அதில் இருந்தது சில்க்ஸ்மிதா கையெழுத்து இல்லை. ஆதாரங்களை அழித்துவிட்டனர். ஸ்மிதா சாவில் மர்மம் இருக்கிறது.
அலைகள் ஓய்வதில்லை போன்று குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கத்தான் விரும்பினார். ஆனால் காசுக்காக அவரை கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர். அவரை வைத்து மற்றவர்கள் சம்பாதித்தனர். இப்போதும் அதுதான் நடக்கிறது. செத்த பிறகும் அவரை மோசமாக சித்தரித்து பணம் பார்க்கிறார்கள். பாவம் என் அக்கா, பரிதாபமாக உயிரை விட்டதுதான் மிச்சம்,” என்றார்
0 comments:
கருத்துரையிடுக