siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

பாம்புகளும் பரமசிவன் கழுத்தும் சிறப்பு கட்டுரைகள் >>

26.10.2012.By.Rajah.குறித்துரைக்கப்பட்ட குறிக்கோள் அல்லது குறிக்கோள்களை அடைவதற்கானதொரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கில் ஒழுகுகின்ற, இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களுடைய இணைவு நிறுவனம் எனப்படுகின்றது.
முகாமைத்துவத்துறை விற்பன்னரான பார்ஹர் பொலெட் எனும் அறிஞர் 1941 ஆம் ஆண்டில் சொல்லிச் சென்ற வரைவிலக்கணத்தின் இலகுபடுத்தப்பட்ட தமிழாக்கம் இது! "குறித்துரைக்கப்பட்ட", "கட்டமைக்கப்பட்ட", "ஒன்றிணைக்கப்பட்ட'' போன்ற வினையெச்சங்களுக்குள் "குறிக்கோள்", "ஒழுங்கு", "நபர்கள்" எனும் பெயர்ச் சொற்கள் கச்சிதமாகப் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள குறித்த நிறுவலினுள், வினையெச்சங்களின் பிரசன்னமில்லாத போது, பெயர்ச்சொற்களிடம் வெறுமையே எஞ்சும் என்பதை கொஞ்சம் மூன்றாம் கண் திறந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்.

எவராலும். வெறும் கற்களாலும், சாந்தினாலும் மரத்தினாலும் முடிக்கப்பட்ட "வீடு", மனிதர்களும், உணர்வுகளும், அன்பும், பண்பும் இணைந்து பின்னால் "இல்லம்" ஆக மாறுவதை மேலே கூறப்பட்ட நிலைமைக்கு இன்னொரு உதாரணமாக்கிட முடியும்.

அரச இயந்திரத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் என்பனவும், பொது வரைவுக்குள் அகப்பட்டுக் கொள்வதனால் சகல நிபந்தனைகளுக்குமான எழுத்துருவில் அரச, தனியார் என பாகுபடுத்தப்படுவதில்லை. இன்றைய நாள்களில் ஐரோப்பிய தேசங்களில் பிரபல்யமடைந்து வருகின்ற "காகிதமற்ற அலுவலகங்கள்" (Paperless offices) போன்ற புரட்சியாக" மனிதர்களற்ற அலு வலகங்கள்" எனும் மாற்றம் நிகழுமாயின் மட்டுமே உணர்வுகளற்ற நிறுவனங்களை தாபன விதிக் கோவையுடன் 100 வீதம் ஒத்துப் போகின்றவையாக இறுக்க முடியும் என்பது யதார்த்தம். தவிர, என்பு தோல் போர்த்த, இரத்தம் சுழன்றோடும், சிரிக்கும் விலங்குகளால் அங்கத்துவம் வகிக்கப்படுகின்ற நிறுவனங்கள் யாவையும், "நெகிழ்வு" எனும் மரியாதைக்குரிய பிரயோகத்துடனான "விதிவிலக்கினை"ப் பெறுவதிலிருந்து தவறுவதேயில்லை.

எல்லா அதிகாரிகளும், எல்லாப் பணியாளர்களும் எல்லாச் சேவகர்களும் அரசின் அங்கங்கள் என்பதற்கு மேலாக யாரோவொரு தாயின் மகள் யாரோவொரு தந்தையின் மகள், அங்காடியிலிருந்து திரும்பும் பெண்ணின் கணவர், எதிர்ப்படும் மனிதனின் துணைவி, அந்தப் பேருந்திலிருந்து கைகாட்டும் குழந்தையின் தந்தை, வெள்ளிக்கிழமை முடிந்த சந்தோஷத்தோடு போகின்ற மாணவனின் தாய் போன்ற வகிபாகங்கள் உணர்வுபூர்வமானவையா? இல்லையா? இன்னமும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல வேண்டுமாயின் "யாவருமே மனிதர்கள்" இல்லையா? கண்ணீர், வலி, துக்கம், சிரிப்பு, அழுகை போன்ற வெளிப்பாடுகளை வீசி விட்டுத்தான் அலுவலகம் வருபவர்கள் இல்லை எவருமே!

போரின் அவலங்களைத் தாண்டியும் மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியவர்கள் என்கின்ற எழுதாப்பெருமை வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் அரச ஊழியர்கள் பற்றி நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ளவர்களால் இன்னும் பேசப்படுகின்றது. ஆனால் இன்றைய தமிழ் பேசும் பகுதிகளின் அரச நிர்வாகிகள் உண்மைத் தோலின் மேலுள்ள வியாதிகளை இன்னும் எத்தனை நாளைக்கு 'பழைய' அரிதாரங்களால் பூசி மெழுகி மறைத்திடமுடியும்? குறிப்பாக 'வடமாகாண சபை'யின் தொற்று நோயாளர் விடுதி, அதிகார, ஏதேச்சாதிகார, நோயாளிகளால் நிரம்பி வழிவதை என்ன வகை 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கப் போகின்றோம்?

இன்றைய திகதி வரைக்கும் வெளித் தெரிகின்ற முறைகேடுகள் வெகு சில வாகவும், அறியப்படாத அவலங்கள் மிகப் பலவாகவும் சடுதியாக ஆர்முடுகுகின்ற "நிர்வாக நகரம்" என்ற சொல் வட மாகாண சபையைப் பொறுத்த மட்டில் மிகையில்லை. இராணுவ மிடுக்கும், இதயக் கோளாறும் கடும் போட்டியிருக்கின்ற "கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்த" மனிதனின் மீதான புகார்கள், குற்றப்பட்டியல்கள் மீதான விசாரணைகள் என்றைக்குமே தீர்வு கண்டுவிடாத பேரினவாதத்தின் ஜனநாயக "வால்வில்" உள்ள பெரும் அடக்குமுறை அடைப்பு.

அது மாத்திரம் தான், பிரச்சினைகளின் ஏக புத்திரன் என்றால், தலைகீழாக நின்றாகினும் தலை முழுகி விடலாம்! இருக்க, இன்றைய இடங்களை தக்கவைக்கவும், நாளைய இடங்களை முன்பதிவுறுதி செய்யவும், நேற்றைய காலாவதிகளை நீடிக்கவும் கருதி, ஆறறிவிலிருந்து ஐந்து, நான்கு என்று அதலபாதாளத்துக்குள் மனிதமிழக்கும் எம்மவர்கள்தானே முதன்மைச் சிக்கல்கள்.

பிரிக்கப்பட்டதன் பின் இன்னமும், மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரகிருதிகள், மன்னிக்க, பிரதிநிதிகள் சபை ஒன்று தோற்றுவிக்கப்படாமல் இருப்பது மட்டுமே இவையாவைக்குமான "சர்வரோக நிவாரணி" என்று எடுத்த எடுப்பிலேயே கம்பீரம் காட்டிவிடமுடியாது. காரணம், "வீழ்த்திவிட முடியாத மாகாண சபை" என்று தொடை தட்டி, "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி"யின் மூக்குக்கு முன்னால் சபதம் செய்யுமளவுக்கு, மீதமிருந்த கொஞ்சநஞ்ச "விரல் வித்தை"யையும் சற்று முன்னரே ஹசன் அலியிடமும் ஹக்கீமிடமும் காவு கொடுத்த, வலி சுமக்கும் உணர்வாளர்கள் எவரும் துணிந்து விடப் போவதில்லை. (பார்த்தீர்களா, கடைசியா "முன்னணி" பெயரைச் சரியாகவே எழுதிட்டோமே!)

"மூன்று நாள் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரி வரும் சுற்றறிக்கை கடிதங்களைக் கூட ஊழியர்களிடம் மறைப்பது", "தேவை நிமித்தம் விண்ணப்பிக்கின்ற தற்காலிக இடமாற்றக் கோரிக்கைகளைக் கூட முற்றளிக்காமல் முடக்குவது", "ஊக்குவிப்புக் கொடுப்பனவு, பதவியுயர்வுகள், சம்பள ஏற்றங்களுக்கான விண்ணப்பங்களை பரிந்துரைக்கான ஒப்பமிடாமல் இழுத்தடிப்பது" என்று விசமத்தனமாகத் தொடங்கும் அதிகார விசக் கொடுக்கின் தீண்டல்களால் பாதிக்கப்படாத "வரலாற்றுத்தாள்" களும் "ஆண்டறிக்கை" களும் வெகு சொற்பமே!

கடந்த மாதங்களில் அலுவலக மேசைகளில் கோப்புகளை விட அலாதியாக விரித்து வைக்கப்பட்டிருந்த சம்பவங்களான மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்துக்கும், முல்லைத்தீவிலிருந்து தீவகத்துக்கு தூக்கியடிக்கப்பட்ட வலயப் பணிப்பாளரின் இழுபறிக்கும் மேலதிகமாக இவ்வாரத் தொடக்கத்தில் தண்டனை இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் இன்றைய பொம்மைக் கதிரைக்கும் காரணமான முன்னோட்டங்களே, புளிக்காத அவல்!

இற்றைக்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பாக, வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபைக்கென்று பூரணப்படுத்தி முடிக்கப்பட்ட அழகான கட்டடம், திறப்பு விழா காண்பதற்கு முன்னைய இரவு கழிவு எண்ணெய் ஊற்றி கண்டன அபிஷேகம் செய்யப்பட்டது யாவர்க்கும் நினைவிருக்கும். அன்றைக்கு எத்தி விளையாடப்பட்ட எண்ணெய் கழிக்கப்பட்ட வாகனத்தின் இலக்கத்தைக்கூட கண்டு பிடிக்கும் அதிகாரமும், கையில் வெண்ணையும் இருக்கின்ற போதிலும் தண்டிக்கப்பட்டது யார்?

வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் கட்டடத்தின் சாவியை ஒப்படைத்த நேரடிக் காரணியாக அடையாளம் காணப்பட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரை பெயரே இல்லாத பதவியொன்றுக்கு இட்டு நிரப்பி ஆத்ம திருப்தி கண்டுகொண்டது அதிகாரி மையம்.

கட்டட ஒப்பந்தக்காரருடனான உடன்படிக்கை வாசகங்களின் பிரகாரம், வலி.தெற்கு பிரதேச சபையிடம்தான் புதுக்கட்டடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம், அத்திபாரக் கல்லோடு சேர்த்து இடப்பட்ட விடயம். புதுக்கட்டடத் திறப்பு விழா ஆளுநரின் முதன்மையிலிருந்து தவறி, சபையின் மக்களதிகாரத்தைக் கைவசம் கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் சென்றுவிடக் கூடாதென்கின்ற அழுக்காறு, ஆயுத முனையில் மிரட்டி அசிங்கப்படுத்துமளவுக்கு துணிச்சலைக் கொடுத்துக் கெடுத்தது.

காட்டுக்கந்தோர் ஒழுங்கையின் சார்பில், களமிறங்கச் செய்தது "ஸ்ரான்லி வீதி" தான் என்பது, "ஆடியபாதம் வீதிக்கு" மட்டுமன்றி அனைத்துக் குடாநாட்டுக்கும் தெரியும் என்றாலும், தவறே இல்லாத விடயத்துக்காக தண்டிக்கப்பட்டிருப்பது, அன்றைக்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் பதவியில் இருந்த இளம் அதிகாரியும், அவர் சார்பில் பதிலொப்பம் இட்டிருந்த பதவிநிலை உத்தியோகத்தருமே!

மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட பதவிப் பொறுப்பில் இருந்த குறித்த இலக்கை, நிர்வாக சேவை தரமுடைய அதிகாரியின் "பணிக்கூர்மை" யினால் கவனித்து அவரை மாகாண சபைக்குள்ளான பொறுப்பான பதவிக்குள் ஈர்ப்பதற்கு காரணமான பெரிய அம்மணியே! இன்றைக்கு தண்டனை இடமாற்றத்துக்கான உத்தரவினை ஏவிவிட்ட பெருமிதத்துக்கும் காரணமானவர் என்பது நிச்சயம் தற்செயலானதோ, துர்ப்பாக்கியமானதோ அல்ல! குறித்த நிகழ்வு பற்றிய ஒழுக்காற்று விசாரணைகள் நிலுவையில் இருந்துகொண்டிருக்கும் பொழுதே, அந்த அதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு புலமைப் பரிசில் ஒன்றுக்கான வாய்ப்புக்கள் விமானப் பயணச்சீட்டு வரை வந்து சடுதியாக நிறுத்தப்பட்டதும் கூடவா அரச கொள்கை? "கழிவு முகாமைத்துவம்" தனியே மாநகரசபைக்கு மட்டுமன்றி, முழு மாகாண சபைக்குமான துப்புரவாக்குதலின் அவசிய சேவை. ஏனெனில் "தூக்க" வேண்டிய கதிரைகள் தொகை பெரிது! பெரிது!
An Administrator does right the things, A leader does right things — நிர்வாகி, சரியானதைச் செய்பவன் — தலைவன்''! என்றாகும் சரி என்பதை எண்ணமாகவேனும் கொள்ளாதவர்களை எவ்வாறு நிர்வாகிகளாகவோ, தலைவர்களாகவோ காணப் போகின்றோம்.

எதிர்க்கட்சி வேட்பாளரை, தனது அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கும் பெருந்தன்மையும், எதிரில் நின்றவனையும் பக்கத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவமும் இருந்ததால்தானே, இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு கூட கொடுமைப்படுத்தப்பட்ட அமெரிக்க கறுப்பினத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு வரமுடிந்தது ஒபாமாவினால்! எங்களால், பழைய பூங்காவில் முதிர் மரங்களின் சாவின் மேல் பங்களா கட்டி, பளிங்குக்கல் பதித்துப் பால் காய்ச்ச மட்டுமே முடிந்தது!!

"யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஆள்கள் போக இயலாத நேரம், சோதினை எழுதி பதவிக்கு வந்தவைக்கு இவ்வளவுதானே மண்டை" என்கின்ற அவப்பெயர்களும், அதே உயரதிகாரிகள் பெண்களாயுள்ளபோது எக்கச்சக்கமாக வீசப்படுகின்ற "தனிப்பட்ட வாழ்வின்" கறை ஊகங்களும் பொய்யாகிவிட வேண்டும் என்பதே எமது பிரார்த் தனைகளும்கூட!

"வாளி தூக்குதல்", "சோப்புப் போடுதல்", "ஐஸ் அடித்தல்", "கொள்ளி சொருகுதல்", போன்ற கொள்கைத் தொடர்களை வசனங்களாக மட்டுமே வைத்திருக்க வடமாகாணத்தின் எல்லா மேலதிகாரிகளும் வரும் நாள்க ளில் மனது வைப்பார்கள் எனவும் நம்பு வோமாக!

"நான்", "நீ" எனும்போது உதடுகள் ஒட்டுவதில்லை, "நாம்" என்கையிலேயே உதடுகள் கூட ஒட்டும் என்று அரச பேருந்துகளில் எழுதி வைத்தவர் கலைஞர் கருணாநிதி!

காலக் கொடுமை என்னவெனில், "ஆளுநர்" என்கின்றபோது ஒட்டாத உதடுகள் "அமைச்சர்" எனும் போது இறுகி ஒட்டிக்கொள்வதை மீளவும் உச்சரித்து சரிபார்க்கும் நானும் நீயும் மட்டுமே அப்பாவித் தமிழர்களடா